சென்னை : “அதிமுக – பாஜக கூட்டணியை மோடியும், அமித் ஷாவும் உறுதி செய்துவிட்டனர், மாநில தலைவர் சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக – பாஜக இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் தீவிரமடைந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று பேசியதாக தகவல் வெளியானது. இந்த தகவலை அண்ணாமலை மறுக்கவில்லை.
இதைத்தொடர்ந்து அமித் ஷா அண்ணாமலையை அழைத்து ஆலோசனை நடத்தினார். பின்னர் அதிமுக மற்றும் பாஜக இடையிலான கூட்டணி தொடர்வதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அண்மையில் டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் தெரிவித்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் அதனை உறுதி செய்யும் வகையில் பேசினார்.
ஆனால், தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் இருக்கும்போது கூட்டணி குறித்து இப்போது முடிவுரை எழுத முடியாது என்றும் கூட்டணியில் பாஜக இருக்கிறது என்று தான் அமித் ஷா கூறினாரே தவிர கூட்டணியை உறுதி செய்யவில்லை என்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.
அண்ணாமலையின் பேச்சு மீண்டும் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், கூட்டணி குறித்து பாஜக மாநிலத் தலைவர்கள் முடிவெடுக்க முடியாது, பாஜகவில் கூட்டணி குறித்து தேசிய தலைமை தான் முடிவெடுக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 5) செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே கூட்டணி பற்றி தெளிவுபடுத்திவிட்டார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பேட்டி அளிக்கும்போது அதிமுக கூட்டணியில் இருக்கிறோம் எனத் தெரிவித்துவிட்டார்.
பாஜகவை பொறுத்தவரை பாராளுமன்றக் குழு தான் கூட்டணியை முடிவு செய்யும் அதிமுக – பாஜக கூட்டணியை மோடியும், அமித்ஷாவும் உறுதி செய்துவிட்டனர். மாநில தலைவர் சொல்லும் கருத்தையெல்லாம் நாங்கள் ஏற்க முடியாது” என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக மூத்த நிர்வாகியான ஜெயக்குமார் இவ்வாறு பேசியிருப்பது பாஜகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.