புதுச்சேரி: சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தாத தொழி்ல் நிறுவனங்களைக் கொண்டு வர சேதராப்பட்டு நிலத்தில் இடங்களை தர பிரெஞ்சு நிறுவனங்கள் அரசிடம் கோரியுள்ளன. விரைவில் இந்நிலம் மேம்படுத்தப்பட்டு தொழில் நிறுவனங்களிடம் தரப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.
புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் இன்று செய்தியாளர்களிடம்கூறியதாவது: “கரோனா தாக்கம் அதிகமாக இருப்பதாக மருத்துவத் துறையின் அறிக்கையின்படி10 நாட்களுக்கு விடுப்பு விடப்பட்டது. மீண்டும் மருத்துவத் துறையின் ஆலோசனை பெற்று முதல்வருடன் கலந்து பேசி கல்வித் துறை அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும்.
கரோனா நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றுதான் பள்ளிகளுக்கு ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த நெறிமுறைகள் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்பது முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான். புதுச்சேரிக்கு நிறைய மருந்து தொழிற்சாலைகள் வர தயாராக உள்ளனர்.
தொழில் தொடங்க ஏதுவான மாநிலமாக புதுச்சேரி இருப்பதாக வெளிநாட்டில் இருக்கும் முதலீட்டாளர்கள் நினைக்கின்றனர். அதிக அளவில் பிரெஞ்சு நிறுவனங்கள் நேரடியாக வந்து சந்தித்து சேதராப்பட்டு நிலத்தில் தனியாக இடம் ஒதுக்கி தரக் கூறியுள்ளனர். சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தாத நிறுவனங்களை கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
அதேபோல் ஆட்டோ மொபைல் ஐ.டி நிறுவனங்கள் தொடங்குவதாக தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் பல நிறுவனங்களுக்கு நிலுவையில் இருந்த ஊக்கத்தொகை ரூ.30 கோடி வரை தந்துள்ளோம். கடந்த காலத்தில் அறிவிக்கப்பட்ட சலுகைகள் தொழில் நிறுவனங்களுக்கு நிறைவேற்றப்படவில்லை. அரசு வந்த பிறகு அதை நிறைவேற்றி உள்ளோம். அதனால் தொழில் தொடங்க பலரும் ஆர்வமாக உள்ளனர் வெகு விரைவில் சேதராப்பட்டு நிலம் மேம்படுத்தப்பட்டு தொழில் நிறுவனங்களிடம் தரப்படும்” என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.