பெங்களூரு, வேலை செய்த இடத்தில் சம்பளம் கிடைக்காததால், மூன்று தொழிலாளர்கள் பெங்களூரில் இருந்து ஒடிசாவுக்கு, 1,167 கிலோ மீட்டர் துாரம் நடந்தே சென்ற அவலம் நடந்துள்ளது.
கர்நாடகாவில், முதல்வர் பசவராஜ் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பெங்களூருக்கு, ஒடிசா மாநிலத்தின் கலஹண்டி மாவட்டத்தைச் சேர்ந்த புடு மாஜி, கட்டார் மாஜி, பிகாரி மாஜி மூவரும், இரண்டு மாதங்களுக்கு முன் வேலை தேடி வந்தனர்.
அவர்களுக்கு ஒரு இடத்தில் வேலை கிடைத்தது. இரண்டு மாதங்களாக வேலை செய்தும் சம்பளம் வழங்கப்படவில்லை. சம்பளம் கேட்ட போது, உரிமையாளர் மூவரையும் அடித்து, உதைத்து உள்ளார்.
சம்பளம் கிடைக்காது என தெரிந்ததும், மூவரும் சொந்த ஊருக்கு கிளம்பினர். ஆனால், கையில் பணம் இல்லை. என்ன செய்வது என்று யோசித்தவர்கள், நடந்தே செல்ல முடிவு செய்தனர்.
மார்ச் 26ம் தேதி, அவர்கள் பெங்களூரில் இருந்து புறப்பட்டனர். மூன்று பேரும் தண்ணீரை மட்டுமே குடித்து நடந்து சென்றனர்.
தொடர்ந்து நடந்தவர்கள், எட்டு நாட்களுக்குப் பின், ஏப்., 2ம் தேதி, ஒடிசாவில் உள்ள கோரபுட் என்ற இடத்திற்கு வந்தனர். பெங்களூரில் இருந்து கோரபுட்டிற்கு, 1,167 கி.மீ., துாரம்.
அங்கு ஹோட்டல் வைத்திருக்கும் ஒருவரிடம் தங்கள் நிலையை கூற, அவர் உணவும், சிறிது பணமும் கொடுத்தார். பின், அப்பகுதி மக்கள் பணம் கொடுத்து, மூவரையும் வாகனத்தில் கலஹண்டிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த செய்தி தற்போது வெளியாகியுள்ள நிலையில், போலீசார் இது பற்றி விசாரித்து வருகின்றனர்.