தாயுவான், ”அடுத்த ஆண்டு நடக்க உள்ள தைவான் அதிபர் தேர்தலில் போட்டியிட, எதிர்க்கட்சியான கோமிண்டாங்விடம் ஆதரவு கேட்க உள்ளேன்,” என, ‘பாக்ஸ்கான்’ நிறுவனர் டெர்ரி கோவ் தெரிவித்து உள்ளார்.
கிழக்காசிய நாடான தைவானில், அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இந்நாட்டிற்கு சீனா சொந்தம் கொண்டாடி வரும் நிலையில், எதிர் வரும் தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் நேற்று, தாயுவானில் உள்ள ஹோட்டல் ஒன்றில், பாக்ஸ்கான் நிறுவனர் டெர்ரி கோவ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
சீனா உடனான போரை தவிர்ப்பதற்கு ஒரே வழி, சீனா- – அமெரிக்கா இடையேயான பதற்றத்தை குறைக்க வேண்டும்.
மேலும், ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சியை ஆட்சி அதிகாரத்தில் இருந்து துாக்கியெறிய வேண்டும்.
சீனா எதிர்ப்பு மனநிலையை கொண்ட ஆளுங்கட்சிக்கு ஓட்டளித்தால், அது ஆபத்தானது என்பதை இளைஞர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
கோமிண்டாங் கட்சி என்னை பரிந்துரைத்தால், 2024 அதிபர் தேர்தலில் வெற்றி பெற என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 2019 தைவான் அதிபர் தேர்தலில் போட்டியிட, பாக்ஸ்கான் நிறுவனர் பொறுப்பில் இருந்து, டெர்ரி கோவ் விலகினார்.
ஆனால், அதிபர் தேர்தல் வேட்பாளர் தேர்வில், கோமிண்டாங் கட்சியின் ஆதரவை, அவரால் பெற முடியவில்லை.
தற்போது இரண்டாவது முறையாக, அதிபர் தேர்தலில் போட்டியிட, அக்கட்சியிடம், டெர்ரி கோவ் ஆதரவு கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.