புதுடில்லி, பாடப் புத்தகங்களை சீரமைக்கும்போது குறிப்பிடப்படாத சில பகுதிகள், பாடப் புத்தகங்களில் விடுபட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், ‘கவனக்குறைவாக நடந்துள்ளது’ என, என்.சி.இ.ஆர்.டி., தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.
என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில், பாடப் புத்தகங்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
இந்த அமைப்பு தெரிவிக்கும் பாடப் புத்தகங்களையே, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் மற்றும் சில மாநில கல்வி வாரியங்கள் பயன்படுத்துகின்றன.
நேற்று முன்தினம், பிளஸ் ௨ வரலாற்று பாடப் புத்தகத்தில், முகலாயர்கள் தொடர்பான சில பாடங்கள் நீக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில், பிளஸ் ௨ அரசியல் அறிவியல் பாட புத்தகத்தில், மஹாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டது, ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு தடை உள்ளிட்ட சில குறிப்பிட்ட வரிகள் பாடப் புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்து உள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, என்.சி.இ.ஆர்.டி., இயக்குனர் தினேஷ் சக்லானி நேற்று கூறியதாவது:
கொரோனா வைரஸ் பரவல் காலத்தில், கற்பதில் சில பிரச்னைகள் இருப்பதாக மாணவர்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தொடர்பில்லாத, பல்வேறு இடங்களில் இடம்பெற்றுள்ள பாடங்கள் குறைக்கப்பட்டன. இதற்கான அறிவிப்பு கடந்தாண்டு ஜூனில் வெளியிடப்பட்டது.
நிபுணர்கள் குழுவினர் பரிந்துரையின்படியே, இந்த திருத்தங்கள் செய்யப்பட்டு, எந்தெந்த பாடங்கள் மாற்றப்பட்டுள்ளன என்பதற்கான கையேடு வெளியிடப்பட்டது.
அந்தக் கையேட்டில் இடம்பெறாத சில பகுதிகள் தற்போது நீக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது கவனக்குறைவால் ஏற்பட்ட பிரச்னை. இதை பெரிதாக்க வேண்டாம்.
நிபுணர் குழு பரிந்துரைப்படி நீக்கப்பட்டு, கையேட்டில் இடம்பெறாதவை குறித்த அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.