அரிசி திருடியவர் அடித்துக் கொலை 13 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல்| 13 people who stole rice were beaten to death and sentenced to 7 years of rigorous imprisonment

பாலக்காடு கேரள மாநிலம் அட்டப்பாடியைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர் மது அடித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தில், 14 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, 13 பேருக்கு தலா ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

கேரள மாநிலம் அட்டப்பாடியைச் சேர்ந்தவர் மது,30. மனநலம் குன்றியவரான இவரை, 2018 பிப்ரவரியில், பொருட்களை திருடியதாகக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கொடூரமாக தாக்கினர். இதில், அவர் உயிரிழந்தார்.

விசாரணையில், மது பசி தாங்காமல் மளிகை கடையில் அரிசி எடுத்தது தெரியவந்தது.

மதுவின் பிரேத பரிசோதனையில், அவர் வயிற்றில் ஒரு பருக்கைக் கூட இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியானது. இவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது, தேசிய அளவில் கவனம் பெற்றது.

வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியைச் சேர்ந்த 16 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த விசாரணைக்குப் பின், நேற்று முன்தினம் நீதிபதி ரதீஷ்குமார், குற்றம் சாட்டப்பட்ட 16 பேரில் 14 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார்.

நேற்று, குற்றவாளிகளுக்கு தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டது. இதில் முனீர் என்பவர் கொலைக்குற்றத்தில் ஈடுபடாதவர் என்பதால், மூன்று மாதம் சிறை தண்டனையும் 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

எஞ்சிய 13 பேருக்கு, தலா ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா 1 லட்சத்து 5,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி ரதீஷ் குமார் உத்தரவிட்டார். அபராத தொகையில் 50 சதவீதம் மதுவின் தாய்க்கும், மீதி சகோதரிக்கும் வழங்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.