சென்னை: தெற்கு ரயில்வேயில் கடந்த நிதியாண்டில் (2022-23-ம் நிதியாண்டு) 2,037 கி.மீ. பாதையில் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள முக்கிய வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே தொடர்ந்து நடவடிக்கை எடுக்கிறது. தண்டவாளம், சிக்னல் முறைகளை மேம்படுத்துவது, பாலம் அமைத்தல், வளைவுகளை குறைத்தல் உள்பட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இப்பணிகள் முடிந்த வழித்தடங்களில் ரயில் வேகத்தை அதிகரித்து, இயக்க அனுமதிக்கப் படுகிறது.
ரயில்களின் வேகம் பொருத்தவரை குரூப் ஏ வழித்தடம், குரூப் பி வழித்தடம் என பிரிக்கப்பட்டுள்ளது. குரூப் ஏ வழித்தடத்தில் அதிகபட்சம் 160 கி.மீ. வரையும், குரூப் பி வழித்தடத்தில் 130 கி.மீ வரையும் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும்.
இந்நிலையில், தெற்கு ரயில்வேயில் கடந்த நிதியாண்டில் 2,037 கி.மீ. பாதை வேகத்தை அதிகரிக்க மேம்படுத்தப்பட்டுள்ளன. இதன்காரணமாக, 2022-23-ம் நிதியாண்டில் பல வழித்தடங்களில் அதிவேகத்தில் ரயில்கள் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 44 ரயில் சேவைகளின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில்களின் வேகம் அதிகரிப்பது மூலமாக, பயண நேரம் குறைகிறது. இதுபோல பலவழித்தடங்களில் ரயில் தண்டவாளம் மேம்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெறகிறது.