தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் தனது கடைசிப் படமான ‘தர்பார்’ படத்தை தொடர்ந்து எந்தவொரு படத்தையும் இயக்கவில்லை. சமீபத்தில் திரிஷா நடிப்பில் வெளியான ‘ராங்கி’ படத்தை தயாரித்திருந்தார், அடுத்ததாக அவரது தயாரிப்பில் ‘ஆகஸ்ட் 16, 1947’ படம் ஏப்ரல் 7 அன்று வெளியாகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் நடிப்பில் வெளியான ‘ஸ்பைடர்’ படமும், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘தர்பார்’ படமும் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களை கவராமல் தோல்வியை தழுவிய நிலையில் இந்த இரண்டு படங்களின் தோல்விக்கான காரணம் குறித்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பகிர்ந்துள்ளார்.
2017 ஆம் ஆண்டு முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்த ‘ஸ்பைடர்’ படம் வெளியானது. சமீப காலங்களில் ஒரு பெரிய தெலுங்கு ஹீரோவை இயக்கிய முதல் தமிழ் இயக்குனர்களில் முருகதாஸும் ஒருவர். இப்படம் சரியாக ரசிகர்களை சென்றடையாதது பற்றி இயக்குனர் முருகதாஸ் அளித்த பேட்டியில், ‘நான் ‘ஸ்பைடர்’ படத்தை வேறு கண்ணோட்டத்தில் பார்த்துவிட்டேன், தமிழ் ஆடியன்ஸ் எஸ்.ஜே.சூர்யாவுக்காகவும், தெலுங்கு ஆடியன்ஸ் மகேஷ் பாபுவுக்காகவும் படம் பார்ப்பார்கள் என்று கணக்கிட்டேன். தமிழில் மகேஷ் பாபுவை ஒரு பெரிய கமர்ஷியல் ஹீரோவாக முன்னிறுத்த முடியாததால், அவருடைய கதாபாத்திரத்தை கொஞ்சம் கொஞ்சமாக செய்தேன். ஆனால், மகேஷ் பாபு போன்ற சூப்பர் ஸ்டாரை குறைவாக காட்டி எஸ்.ஜே.சூர்யாவை தமிழ் இயக்குனர் உயர்த்தி காட்டிவிட்டார் என்று தெலுங்கில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இதுவே படத்திற்கு எதிர்மறையான கருத்துக்கள் வர காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார்.
அடுத்ததாக ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ படம் ஏன் பாக்ஸ் ஆபிஸில் சாதனை செய்யவில்லை என்பது பற்றி பேசினார். படத்தை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்கிற அழுத்ததாலேயே சரியாக செயல்பட முடியவில்லை. அவர் கூறுகையில், “ஒருவர் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும், அவர் ஒரு திட்டத்தை சரியாக திட்டமிடவில்லை என்றால் அது வேலை செய்யாது. ஒரு படத்தை நம்பக்கூடியதாக மாற்ற, செட் முதல் லொகேஷன் வரை மேக்கப் வரை அனைத்தையும் திட்டமிட உங்களுக்கு போதுமான நேரம் தேவை. அமீர்கான் ஒருமுறை என்னிடம், ‘நான் உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன், படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு முன்பே யாராவது ஒரு படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்தால், படம் ஏற்கனவே தோல்வியடைவதற்கு 50 சதவீதம் வாய்ப்பு உள்ளது. ஒரு படத்தை உங்கள் விருப்பப்படி தொடங்குங்கள், படத்தின் 80 சதவிகிதம் முடிந்ததும், ரிலீஸ் தேதியைஅறிவியுங்கள்’ என்று கூறினார். அவ்வாறு அவர் சொன்னதை நான் தர்பாருக்கு பிறகு தான் உணர்ந்தேன் என்று கூறியுள்ளார்.