மநீம: 'கிராமங்களுக்கு முக்கியத்துவம்… பூத் கமிட்டிக்கு 20 பேர்' – கமலின் திட்டம் என்ன?!

“மநீம தொடக்கம்…”

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதாக அறிவித்து, கடந்த 2018-ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கினார். அந்தக் கட்சி 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. அப்போது கமல் தேர்தலை சந்திக்கவில்லை. மநீம வேட்பாளர்கள் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தனர். அப்போது அந்த கட்சிக்கு 3.72% வாக்குகள் கிடைத்தன.

வானதி சீனிவாசன்

தொடர்ந்து நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார். பிறகு 2021-ம் ஆண்டில் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடந்தது. இதிலும் மநீம போட்டியிட்டது. அப்போது கோவை தெற்கில் கமல்ஹாசன் போட்டியிட்டார். மேலும் அப்போது அவரே நேரடியாக பல இடங்களுக்கு சென்று தனது வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார். ஆனால் இந்த முறையும் தேர்தல் முடிவுகள் அவருக்குச் சாதகமாக அமையவில்லை.

வானதி சீனிவாசனிடம் தோல்வி:

பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் கமல்ஹாசன் தோல்வியடைந்தார். பிறகு வழக்கம் போல் நடிப்பதில் தீவிரம் காட்ட தொடங்கினார். அவரின் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் வெற்றி பெற்றது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் ராகுலின் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றார். அந்த நேரத்தில் காங்கிரஸுடன் தனது கட்சியை கமல் இணைக்கப்போகிறார் என்ற விமர்சனம் எழுந்தது.

கமல் – ராகுல் காந்தி

அதற்கு ராகுல் அழைத்ததால் தான் பங்கேற்றேன் என விளக்கம் அளித்தார். இதற்கிடையில் கடந்த இரண்டு வாரமாக மக்கள் நீதி மையம் கட்சியினர் கிராமங்களில் தீவிர உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டிக்கு 20 பேர் நியமனம் செய்தல் போன்ற பணிகளில் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். என்னதான் நடக்கிறது கமல் கட்சியில் என்று விசாரித்தோம்..

“கிராமங்களில் பலவீனமாக…”

இதுகுறித்து நம்மிடம் பேசிய மக்கள் நீதி மையம் கட்சியினர், “அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்கிறது. இதையொட்டி என்ன செய்ய வேண்டும் என்பதற்காக கடந்த மாதம் மக்கள் நீதி மையம் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முக்கிய நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “அனைவருக்கும் என்னை தெரியும். ஆனால் கிராமங்களில் கட்சி மிகவும் பலவீனமாக இருக்கிறது. இந்த நிலை நாடாளுமன்றத் தேர்தல் வரையிலும் தொடரக்கூடாது. எனவே கிராமங்களில் தீவிர உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும். என்னை தெரியாத யாரும் இருக்க மாட்டார்கள். அவர்களை நீங்கள் சந்தித்து பேசினாலே போதுமானது.

கமல்

“பூத் கமிட்டிகளை…”

அதை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அனைத்து கிராமங்களிலும் நமது கிளை இருக்க வேண்டும். ஒரு பூத் கமிட்டிக்கு 20 பேர் வரை இணைக்க வேண்டும். இதை நீங்கள் விரைந்து மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார். அதன்படி பணிகள் வேகமாக நடந்து வருகிறது. தமிழகத்தை சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கோவை, சேலம், மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய 8 மண்டலங்களாக பிரித்திருக்கிறோம்.

இதையொட்டி, கடந்த மார்ச் 26-ம் தேதி சென்னைக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பூத் கமிட்டிகளை வலுவாக்க வேண்டும். புதிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். அதிக அளவு உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கினோம். தொடர்ந்து மற்ற மண்டலங்களிலும் கூட்டம் நடத்தப்பட்டு ஆலோசனை வழங்கப்படும்” என்றனர்.

`2024 நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரையில், மநீம திமுக கூட்டணியில் இடம்பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு இடம்பெறும் பட்சத்தில் கூட்டணி பேச்சுவார்த்தையில், தங்களின் கட்சிக்காக பேசுவதற்கு கட்சியை பலப்படுத்துவது அவசியம். மநீம-வின் தற்போதைய நடவடிக்கைகள் அதைநோக்கி தான் உள்ளது’ என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.