வாஷிங்டன்-”மூன்றாவது உலகப் போர், அணு ஆயுதப் போராக எப்போது வேண்டுமானாலும் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது,” என, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது, கவர்ச்சி நடிகை ஸ்டார்மி டேனியன்ஸ் கூறிய பாலியல் புகார்களை தடுத்து நிறுத்த பணம் கொடுத்ததாக வழக்கு உள்ளது.
இந்த வழக்கில், நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜரானார் டிரம்ப். அப்போது தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார்.
இந்நிலையில், புளோரிடாவுக்கு திரும்பிய அவர், அங்கு நேற்று நடந்த குடியரசு கட்சி கூட்டத்தில் பேசியதாவது:
அதிபர் ஜோ பைடன் ஆட்சியில் அமெரிக்கா மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நம்முடைய பொருளாதாரம் அதலபாதாளத்துக்கு சென்றுள்ளது.
சீனாவும், ரஷ்யாவும் இணைந்துள்ளன. சவுதி அரேபியாவும், ஈரானும் சேர்ந்துள்ளன. சீனா, ரஷ்யா, ஈரான், வட கொரியா ஆகியவை கூட்டணி அமைத்துஉள்ளது மிகப் பெரிய ஆபத்தாகும்.
அமெரிக்க அதிபராக நான் இருந்திருந்தால், இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்க விட மாட்டேன். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்காது.
தற்போது எந்த நாடாக இருந்தாலும், அணு ஆயுதத்தை எடுப்போம் என்று மிரட்டுகின்றன. அமெரிக்க அதிபராக ஜோ பைடன் தொடர்ந்தால், மூன்றாவது உலகப்போர், அணு ஆயுதப் போராக ஏற்படும் அபாயம் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.