புவனேஷ்வர், பத்து மாநிலங்களில், 27 பெண்களை திருமணம் செய்து, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரமேஷ் சுவைன் மீது, சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
விசாரணை
கடந்த 2021 மே மாதம், புதுடில்லியைச் சேர்ந்த பெண் ஒருவர், ரமேஷ் சுவைன் மீது ஒடிசா போலீசில் புகார் அளித்தார்.
அதில், ‘மருத்துவத் துறையில் இணை இயக்குனராக பணியாற்றுவதாகக் கூறி, ரமேஷ் சுவைன், 66, என்னை திருமணம் செய்தார். சில மாதங்களுக்குப் பின், என்னிடமிருந்த பணம், நகைகளை அபகரித்து தலைமறைவாகி விட்டார்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின், கடந்த ஆண்டு பிப்., 13ல், ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில், ரமேஷ் சுவைனை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.
கடந்த 10 ஆண்டுகளில், 10 மாநிலங்களில், 27 பெண்களை திருமணம் செய்து, அவர்களிடம் குடும்பம் நடத்துவது போல் நடித்து, பணம், நகைகளை சுருட்டி ரமேஷ் சுவைன் தலைமறைவானது விசாரணையில் தெரிய வந்தது.
குறிப்பாக, 40 வயதை கடந்த திருமணமாகாத அல்லது விவாகரத்து பெற்ற பெண்களை அவர் குறிவைத்து மோசடி செய்துள்ளார்.
பணப் பரிமாற்றம்
இந்தோ — திபெத் காவல் அதிகாரி துவங்கி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் வரை அவரால் ஏமாற்றப்பட்ட பெண்களின் பட்டியல் நீள்கிறது.
இந்நிலையில், பல லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரமேஷ் சுவைன் மீது, சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ரமேஷ் சுவைனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை தரும்படி, ஒடிசா போலீசிடம் கேட்டுள்ளோம். பல லட்சம் ரூபாயை எதற்காக, எப்படி செலவு செய்தார் என்பது குறித்து விசாரிக்க உள்ளோம்.
மேலும், அவர் மேற்கொண்ட பணப் பரிவர்த்தனைகளும் ஆராயப்படும். தேவைப்பட்டால் நீதிமன்றத்தை அணுகி அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.