மலையாள சேனல் ஒளிபரப்புக்கான தடையை நீக்கியது சுப்ரீம் கோர்ட்| Supreme Court lifts ban on Malayalam channel broadcasting

புதுடில்லி,மலையாள ‘டிவி சேனல்’ ஒளிபரப்புக்கு மத்திய உள்துறை அமைச்சகம் விதித்திருந்த தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது. ‘பத்திரிகை சுதந்திரத்துக்கு காரணமில்லாமல் கட்டுப்பாடு விதிப்பது ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல’ என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த, ‘மீடியா ஒன்’ என்ற மலையாள சேனல் ஒளிபரப்புக்கு தடை விதித்து, மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜன., ௩௧ல் உத்தரவு பிறப்பித்தது.

தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், ‘மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு செல்லும்’ என, தீர்ப்பு வழங்கியது.

இதை எதிர்த்து, டிவி சேனல் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

தேசிய பாதுகாப்பு என்ற பொதுவான காரணத்தைக் கூறி, தடை விதிப்பதை ஏற்க முடியாது.

இந்த சேனலை நடத்துபவர்கள், ஜமாயத் – இ – இஸ்லாமி என்ற முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தால், அதற்கு கட்டுப்பாடு விதிப்பது சரியல்ல.

ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை பத்திரிகைகள் முன்வைப்பதை, அரசுக்கு எதிரான விமர்சனமாக கருதக் கூடாது. பத்திரிகை சுதந்திரம், நாட்டின் ஜனநாயகம் வலுவாக இருப்பதற்கு மிகவும் முக்கியமாகும்.

சமூக, பொருளாதார கொள்கைகள், அரசியல் கொள்கைகளை எவரும் விமர்சிக்கக் கூடாது என்பது, ஆபத்தாக முடிந்துவிடும்.

எனவே, மலையாள ‘டிவி சேனல்’ ஒளிபரப்புக்கு மத்திய உள்துறை அமைச்சகம் விதித்திருந்த தடை நீக்கப்படுகிறது.

சீலிட்ட உறையில் தன் பதிலை தாக்கல் செய்வது என்பதும் தவறான அணுகுமுறையாகும். தேசிய பாதுகாப்பு என்ற காரணத்தை கூறி, அனைத்து நடவடிக்கைகளையும் மூடி மறைக்கக் கூடாது.

இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.