புதுடெல்லி: கடந்த வாரம் ராமநவமி விழாவின் போது மேற்கு வங்கம், பிஹார் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இது குறித்து கருத்து தெரிவித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த வன்முறைகளை திட்டமிட்டு நடத்தியது பாஜகதான் என்று குற்றம் சாட்டினார்.
மம்தா குற்றச்சாட்டு: மேலும் ஒரு சமூகத்தினரை மற்ற சமூகத்தினருக்கு எதிராக தூண்டிவிட்டு இந்து மதத்துக்கு அவதூறு ஏற்படுத்துகின்றனர். வன்முறையாளர்களுக்கு மதம் கிடையாது. அவர்கள் அரசியல் குண்டர்கள். அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்தார்.
இதேபோல் பிஹார் மாநிலத்திலும் சசாரம் மற்றும் பிஹார் ஷரிப் ஆகிய இடங்களில் மோதல்கள் ஏற்பட்டன. இது குறித்து கருத்து தெரிவித்த பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், ‘‘இது திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறை. இச்சம்பவத்துக்கு காரணமானவர்கள் விரைவில் யார் எனத் தெரியவரும். வீடு, வீடாக சோதனை நடைபெற்று வருகிறது’’ என்றார்.
இந்நிலையில், அனுமன் ஜெயந்தி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதில், ‘‘அனுமன் ஜெயந்தி விழாவை அமைதியுடன் கொண்டாடும் வகையில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதை உறுதி செய்ய வேண்டும். அனுமன் ஜெயந்தி விழா கொண்டாட்டத்தின் போது மதநல்லிணக்கத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விஷயங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்’’ என கூறியுள்ளது.