தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் மருதாநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (25). இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த திருவிழாவை பார்ப்பதற்காக நண்பர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது அதே பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு, சிறுமியை கடத்திச் சென்று கோவிலில் திருமணம் செய்தார். இதைத்தொடர்ந்து மருதாநல்லூரில் சிறுமியுடன் அய்யப்பன் குடும்ப நடத்தி வந்தார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாய் ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு சிறுமியை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் போக்சோ மற்றும் கடத்தல் வழக்கு பதிவு செய்து, அய்யப்பனை கைது செய்தனர்.
இதையடுத்து இது தொடர்பான வழக்கு தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அய்யப்பனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் அபராதம் கட்ட தவறினால், கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.