ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் புலி ஒன்று சிறுத்தையை வேட்டையாடி சாப்பிடும் காட்சியை பெங்களூரை சேர்ந்த புகைப்படக்கலைஞர் ஒருவர் போட்டோ எடுத்திருக்கிறார். இந்த படம் தற்போது சோஷியல் மீடியாவில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
ராஜஸ்தானின் ராந்தம்பூர் தேசிய பூங்காவில் T-101 எனும் புலி ஒன்று ஆக்டிவாக இயங்கி வந்திருகிறது. இதனை பூங்காவின் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். அப்படி இக்கையில், பெங்களூரை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஹர்ஷா நரசிம்மார்த் இந்த புலியை போட்டோ எடுத்திருக்கிறார். இந்த புகைப்படம்தான் தற்போது பேசுபொருளாகியுள்ளது. அதாவது இந்த படத்தில் புலி தன்னுடைய இரையை கொன்று சாவகாசமாக சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது.
சரி இதில் என்ன ஸ்பெஷல்? ஏன் இது பேசுபொருளாகியுள்ளது என்று கேட்கிறீர்களா? புலி வேட்டையாடிய தன்னுடைய இரை ஆடோ, மாடோ, மானோ கிடையாது. அது தன்னுடைய இரையாக சிறுத்தையை வேட்டையாடியிருக்கிறது. உலகின் மிகப்பெரிய பூனை இனத்தில் புலி, சிங்கத்திற்கு அடுத்தபடியாக சிறுத்தைதான் இருக்கிறது. இந்நிலையில் இந்த சிறுத்தையை ஒரு புலி வேட்டையாடி அதை சாப்பிடுவதை இதுவரை யாரும் போட்டாவாக எடுத்ததில்லை.
எனவே தற்போது ஹர்ஷா எடுத்துள்ள போட்டோ விலங்குகள் ஆர்வலர்கள் மத்தியில் மட்டுமல்லாது பொதுமக்கள் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக காட்டில் புலியை பார்ப்பது மிகவும் அரிதானது, அதேபோல புலி சிறுத்தையை வேட்டையாடி சாப்பிட்டுக்கொண்டிருப்பதை பார்ப்பது அதைவிட அரிதானது என்று விலங்கியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.