கேரளாவை சேர்ந்த மீடியா ஒன் தொலைக்காட்சி ஒளிபரப்பிற்கு தடை விதிக்கப்பட்டதும், அதை எதிர்த்து நீதிமன்ற நடவடிக்கைகளும், இறுதியில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் தலைப்பு செய்தியாக மாறியுள்ளன. இந்த விவகாரத்தில் சிலவற்றை திரும்பி பார்க்க வேண்டியுள்ளது. முன்னதாக தேச பாதுகாப்பு என்ற விஷயத்தை சுட்டிக் காட்டி தடையில்லா சான்று (NOC) வழங்க மத்திய அரசு மறுத்துவிடுகிறது.
மீடியா ஒன் விவகாரம்
இதை எதிர்த்து மீடியா ஒன் நிறுவனம் கேரள உயர் நீதிமன்றத்தை அணுகியது. தனி நீதிபதி மற்றும் நீதிமன்ற அமர்வு நடத்திய விசாரணையில் மத்திய அரசு செய்தது சரி என உத்தரவிடப்படுகிறது. அதுமட்டுமின்றி தேச பாதுகாப்பு என்று வரும் போது மீடியா ஒன்று தொலைக்காட்சியின் செயல்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என அதிரடியாக கூறி விடுகின்றனர். முன்னதாக மத்திய அரசு தனது விளக்கத்தை சீலிடப்பட்ட கவரில் கேரள உயர் நீதிமன்றத்தில் சமர்பிக்கிறது.
மத்திய அரசு விளக்கம்
அதை நீதிமன்றமும் பிரித்து பார்த்து விட்டு ஏற்றுக் கொள்கிறது. ஆனால் எந்த வகையில் NOC தர மறுக்கிறீர்கள்? எப்படி எங்களை ஆன்டி நேஷனல் என்கிறீர்கள்? எந்த வகையில் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கும், எங்களுக்கும் சம்பந்தம் உள்ளது எனக் கூறுகிறீர்கள்? என மீடியா ஒன் கேட்கிறது. ஆனால் எந்த விளக்கமும் அளிக்காமல் தடை மட்டும் தொடரும் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறது.
சீலிடப்பட்ட கவர் கலாச்சாரம்
இங்கே ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். சீலிடப்பட்ட கவரில் நீதிபதியிடம் ஒரு தகவலை பரிமாறுவதை மோசமானது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஒருமுறை அல்ல. பலமுறை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு அடுத்தகட்ட சட்டப் போராட்டங்களை முன்னெடுத்து உச்ச நீதிமன்றத்திற்கு மீடியா ஒன் நிறுவனம் செல்கிறது. அங்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் மீடியா ஒன் நிறுவனத்திற்கு பெரிய ஆறுதலாக அமைகிறது.
காரசார கேள்வி
இதையடுத்து மீடியா ஒன் தொலைக்காட்சி மீண்டும் ஒளிபரப்ப ஆரம்பிக்கிறது. மறுபுறம் வழக்கு விசாரணையும் நடைபெறுகிறது. அதில் எதற்காக தடை விதிக்கப்பட்டது? NOC வழங்க மறுக்கிறீர்கள்? என்று மத்திய அரசிடம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு கேள்வி எழுப்புகிறது. அதற்கு சீலிடப்பட்ட கவரில் பாஜக விளக்கத்தை கொடுக்கிறது.
தேசப் பாதுகாப்பு முக்கியம்
அதை ஏற்க முடியாது என்று தலைமை நீதிபதி நிராகரித்து விடுகிறார். ஏன் வெளிப்படையாக நடந்து கொள்ள மறுக்கிறீர்கள் என கண்டிக்கிறது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு நேற்று அதிரடியாக தீர்ப்பு வழங்குகிறது. அதில் தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் பொதுமக்களின் அடிப்படை உரிமையை மறுக்க கூடாது.
தடை நீக்கம்
அரசை விமர்சிப்பதை தேச விரோதமாக கருதக் கூடாது. ஜனநாயகத்தில் இருக்கக்கூடிய உரிமையை மறுக்க முடியாது. எனவே மீடியா ஒன் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் பத்திரிகை சுதந்திரம் என்பது எந்த அளவிற்கு முக்கியமானது. அதற்கு எந்த வகையிலும் நெருக்கடி கொடுக்கக் கூடாது என்பது ஒன்று.
ஏற்கனவே இரண்டு முறை
மற்றொன்று சீலிடப்பட்ட கவரில் கொடுத்து தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்க வேண்டாம். வெளிப்படைத் தன்மை உடன் நடந்து கொள்வதே சரி என்பது. ஏற்கனவே அதானி விவகாரம், ஒரே நாடு ஒரே பென்சன் திட்டம் ஆகியவற்றுக்கு எதிரான வழக்கில் மத்திய அரசு வழங்கிய சீலிடப்பட்ட கவரை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நிராகரித்தது கவனிக்கத்தக்கது.