தலைமைச் செயலாளர் பதவி யாருக்கு? ஸ்டாலின் எடுக்கும் முடிவு!

தமிழ்நாடு தலைமைச் செயலாளராக பதவி வகிக்கும் வெ.இறையன்புவின் பதவிக் காலம் ஜூன் மாதத்துடன் முடிவுக்கு வரும் நிலையில் அடுத்த தலைமைச் செயலாளார் யார் என்ற கேள்விக்கு தொடர்ந்து சில பெயர்கள் அடிபட்டு வருகின்றன.

தமிழ்நாடு அரசு இயந்திரம் எவ்வாறு இயங்க வேண்டும், எப்படி இயக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தலைமைச் செயலாளர் கையில் தான் உள்ளது. அனைத்து துறைச் செயலாளர்களுக்கும் தலைவர் எனும் போது தமிழ்நாடு அரசின் முகத்தை வடிவமைப்பதில் தலைமைச் செயலாளர் பதவிக்கு முக்கிய பங்கு உள்ளது.

ஆளும் அரசின் கொள்கை என்ன, திட்டம் என்ன, என்பவற்றை குறித்த புரிதல் இருந்தால் மட்டுமே முதலமைச்சரின் எண்ணவோட்டத்துக்கு ஈடு கொடுத்து தலைமைச் செயலாளரால் செயல்பட முடியும். முதல்வர் ஸ்டாலின் முதலமைச்சராக முதன்முறையாக பொறுப்பேற்ற போது இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பதவியை இறையன்புவுக்கு வழங்கினார் என்றால் அவர் மீது முதல்வருக்கு இருந்த மதிப்பும், நம்பிக்கையும் முக்கிய காரணம்.

முதல்வரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக சுமார் இரு ஆண்டுகள் அரசு அதிகாரிகள், அலுவலர்களை இறையன்பு சரியாக வழிநடத்தியதன் விளைவாக ஆட்சி மீது பெரியளவில் விமர்சனங்கள் எழவில்லை. இந்நிலையில் அவரது பணிக்காலம் நிறைவடைந்து ஜூன் மாதத்துடன் இறையன்பு ஓய்வு பெற உள்ளார்.

அவரது அனுபவத்தை பயன்படுத்திக் கொள்வதற்காக ஓய்வு பெற்ற ஐஏஎஸ்கள் பணியாற்றும் ஏதேனும் ஒரு பிரிவை அவர் வசம் கொடுக்க முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டதாக சொல்கிறார்கள். அந்த வகையில் தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் பதவியை இறையன்புக்கு வழங்க முடிவெடுத்து அது குறித்து ஆளுநருக்கும் தெரியப்படுத்தியுள்ளதாகவும் சொல்கிறார்கள்.

ஆனால் ஆளுநரோ வழக்கம் போல் இது குறித்தும் முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளதாக கூறுகின்றனர் கோட்டை வட்டாரத்தினர்.

இது ஒருபுறமிருக்க அடுத்த தலைமைச் செயலாளராக யாரை கொண்டு வருவது என்ற பேச்சுவார்த்தை முடிந்த பாடில்லையாம். அரசின் இன்னொரு முகமாக விளங்கக் கூடிய பதவி என்பதால் தொடர்ந்து பல பெயர்கள் பரீசிலனையில் இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது முதல்வர் மேஜைக்கு சென்ற சில பெயர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவதாஸ் மீனா, அதுல்ய மிஸ்ரா, ஜிதேந்திரநாத் ஸ்வைன், ஹன்ஸ்ராஜ் வர்மா, விக்ரம் கபூர், பிரதீப் யாதவ், கார்த்திகேயன் உள்ளிட்டோர் பெயர்கள் அடிபடுவதாக ஒரு பேச்சு நிலவுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.