“என்னை கொல்ல, உத்தவ் தாக்கரே கூலிப்படையை நியமித்தார்” – மத்திய அமைச்சர் ராணே குற்றச்சாட்டு

மத்திய அமைச்சராக இருக்கும் நாராயண் ராணே, ஆரம்பத்தில் சிவசேனாவில் இருந்தார். அங்கிருந்து காங்கிரஸ் கட்சிக்கு சென்றார். காங்கிரஸ் கட்சியில் இருந்த போது அவர் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்தார். காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியில் வந்து சொந்தக்கட்சி ஆரம்பித்தார். தற்போது அவர் பா.ஜ.க.வில் இருக்கிறார். அவரை பாரதிய ஜனதா கட்சி ராஜ்ய சபை உறுப்பினராக்கி மத்திய அமைச்சர் பதவி கொடுத்திருக்கிறது.

உத்தவ் தாக்கரே

நாராயண் ராணே தொடர்ந்து உத்தவ் தாக்கரேயை விமர்சனம் செய்து வருகிறார். தற்போது உத்தவ் தாக்கரே மீது மேலும் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அவர் மும்பையில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் அளித்துள்ள பேட்டியில், “உத்தவ் தாக்கரே என்னை கொலை செய்ய கூலிப்படையை நியமித்தார். மர்ம நபர்கள் என்னை தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்தனர். சிலர் என்னை தொடர்பு கொண்டு எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொண்டனர். என்னை கொலை செய்ய உத்தவ் தாக்கரே கூலிப்படையை நியமித்து இருப்பதாக தெரிவித்தனர். உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்த போது மாநிலத்திற்காகவும், மக்களுக்காகவும் என்ன செய்தார். வீட்டை விட்டு வெளியில் வரவில்லை. மாறாக கொரோனா காலத்தில் மருந்து கொள்முதல் செய்ததில் ஊழல் நடக்க காரணமாக இருந்தார். உத்தவ் தாக்கரேயிக்கு அடுத்தவர்களை குறை கூற மட்டுமே தெரியும். நல்லது செய்பவர்களை பாராட்ட மாட்டார்.

தேவேந்திர பட்னாவிஸ்

துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தனது கடின உழைப்பால் அடிமட்டத்திலிருந்து முன்னேறி வந்திருக்கிறார். அவர் நல்ல அரசியல்வாதி என்பது அனைவருக்கும் தெரியும். உத்தவ் தாக்கரேயின் கட்சியை பற்றி கூற ஆரம்பித்தால் உத்தவ் தாக்கரேயால் வெளியில் முகத்தை காட்டமுடியாது. நான் பால் தாக்கரேயின் கட்சியோடு நீண்ட தொடர்பில் இருந்தவன். பல உண்மைகளை மறைத்துக்கொண்டிருக்கிறேன். பால் தாக்கரேயிக்காக மாதோஸ்ரீ பற்றி விமர்சிக்காமல் இருக்கிறேன்” என்று தெரிவித்தார். உத்தவ் தாக்கரே சமீபத்தில் தேவேந்திர பட்னாவிஸ் குறித்தும், அவர் பயனற்ற துணை முதல்வர் என்றும் குறிப்பிட்டு இருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே ராணே இக்குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.