வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க சிலர் முயற்சித்து வருகின்றனர் என மேற்கத்திய நாடுகள் மீது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மறைமுகமாக குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாஷிங்டனில் நடந்த பொருளாதார கருத்தரங்கில் பேசியதாவது: கோவிட் பேரிடருக்குப் பிறகு இந்திய மக்கள் வியாபார இழப்புகளில் இருந்து மீண்டுள்ளனர். இந்தியாவைப் பற்றி பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்புவதை நம்புவதை விட, என்ன நடக்கிறது என்று நேரில் வந்து பார்த்து புரிந்துக் கொள்ள வேண்டும். இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க சிலர் முயற்சித்து வருகின்றனர். பொய் பிரசாரங்களை பரப்பக் கூடாது.
உலக வர்த்தக அமைப்பு மேலும் வளர்ச்சிப் பணியில் ஈடுபட வேண்டும். அனைத்து நாடுகளின் கோரிக்கைகளையும் கேட்க வேண்டும். நிதி நிலைமை மோசமாக இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளது. இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் உலகின் இரண்டாவது மிகப் பெரிய நாடு இந்தியா. இந்தியாவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது.
1947ல் இருந்ததை விட, தற்போது இஸ்லாமியர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. பாகிஸ்தானில் வாழும் இஸ்லாமியர்களைவிட இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்கள் சிறப்பாக உள்ளனர். அதுமட்டுமின்றி அவர்கள் சிறப்பாக தொழில் செய்கிறார்கள். பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் எண்ணிக்கை சரிவை சந்தித்துள்ளது. அங்கு உரிய விசாரணை இன்றியே சிறுபான்மையினர் தண்டிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement