சரத்குமார் நடிப்பில் `ருத்ரன்’, `பொன்னியின் செல்வன் 2′ என இரண்டு படங்கள் இந்த மாதம் வெளியாக இருக்கின்றன. இதனிடையே பொதுமக்களுக்குத் தன்னுடைய வீட்டிலுள்ள நூலகத்திலிருந்து புத்தகங்களை இலவசமாக வழங்கி வருகிறார் சரத்குமார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது…
“நான் படித்த, எனக்கு அன்பளிப்பாக வந்த, மற்றும் என் தந்தையார் எனக்காக விட்டுச் சென்ற சுமார் 6,000 புத்தகங்களைத் தினமும் எடுத்துப் படிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமில்லை. இந்தப் புத்தகங்களைப் பொக்கிஷமாக வைத்திருப்பதை விட, அதைப் பிறருடன் பகிர்ந்து கொள்வதுதான் அதிகமான மகிழ்ச்சி தரும் என்று நான் எண்ணினேன்.
இறைவன் ஒரு தனி மனிதனிடம் அதிகமான செல்வத்தைத் தருகிறான் என்று சொன்னால், அது பொருட்செல்வமாக இருக்கலாம், அறிவு செல்வமாக இருக்கலாம், அதைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று பகவத் கீதை, குரான் மற்றும் பைபிளில் நான் படித்திருக்கிறேன். அந்தப் பண்பைப் பழகிக்கொண்டும் இருக்கிறேன்.
என்னிடம் உள்ள இந்தப் புத்தகங்களை நூலகத்திற்குக் கொடுத்து விடலாம் என்று சொன்னார்கள், சிலர் விற்றுவிடலாம் என்றும் கூறினார்கள். இந்தப் புத்தகங்களிலிருந்து நான் கற்றுக்கொண்ட விஷயங்களைப் பிறரும் படித்துப் பயன்பெற வேண்டும் என்கிற அடிப்படையில் இலவசமாகவே என் வீட்டின் வெளியில் இந்தப் புத்தங்களை வைத்திருக்கிறேன்.
நான் வீட்டில் இருக்கும் போது வந்து வாங்குவோருக்குப் புத்தகத்தில் கையெழுத்திட்டுக் கொடுத்து வருகிறேன். புத்தக வாசிப்பை முன்னெடுத்துச் செல்ல இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளேன். இதே போலப் பிறரிடம் புத்தகங்கள் அதிகமாக இருந்தால் அவர்களும் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார் சரத்குமார்.