தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் பா.ரஞ்சித் சினிமா பணிகளோடு, சமூக, கலை, பண்பாட்டு பணிகளையும் முன்னெடுத்து வருகிறார். எந்த பணியில் ஈடுபட்டாலும் தன்னுடைய அரசியல் பார்வையை பிரதிபலிக்கும் அவர் கர்நாடக தேர்தல் குறித்து பேசியுள்ளார்.
கர்நாடக சட்டமன்றத் தேர்தல் மே 10ஆம் தேதி நடைபெறுகிறது. மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் என அங்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது. குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி தோல்வி இருக்க கூடும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கோலார் தங்கவயல் தொகுதியில் இந்தியக் குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன் போட்டியிடுகிறார். அவருக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித்.
காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளில் வெளியூரைச் சேர்ந்தவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனால் எஸ்.ராஜேந்திரன் மண்ணின் மைந்தன் என்ற முழக்கத்தோடு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த தொகுதியில் உள்ள ராபர்ட்சன் பேட்டை, மாரிக்குப்பம், சாம்பியன் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் தமிழர்களிடம் வீதி வீதியாக சென்று எஸ்.ராஜேந்திரன் வாக்கு சேகரித்து வருகிறார்.
இந்நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித் வேட்பாளர் எஸ்.ராஜேந்திரனை ஏப்ரல் 9ஆம் தேதி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
இது தொடர்பாக பா.ரஞ்சித், “கோலார் தங்கவயல் தொகுதி இந்தியக் குடியரசு கட்சியின் சொந்த தொகுதி. இந்தக் கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் பல முறை வெற்றிப் பெற்றுள்ளனர். தற்போது இந்தத் தொகுதியை இந்தியக் குடியரசு கட்சி இழந்துள்ளது. இழந்தத் தொகுதியை மீண்டும் கைப்பற்றும் சூழல் தற்போது அமைந்துள்ளது. கோலார் தங்கவயல் தமிழர்கள் தங்களின் பலத்தை மீண்டும் நிரூபிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எனவே, தங்கவயல் மக்கள் எஸ்.ராஜேந்திரனை தேர்தலில் வெற்றி பெற வைக்க வேண்டும்”என்று கூறினார்.