நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான மாநில மாநாடு நெல்லையில் நடைபெற்றது. அதில் பங்கேற்க வருகை தந்த மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு இந்தியாவில் தடைசெய்யப்பட்ட நேரத்தில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தமிழகத்தில் ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டார்கள்.
அதுவும் ஒரே நேரத்தில் 50 இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டதால் சட்டம்-ஒழுங்கு பிரச்னையைக் கவனத்தில் கொண்டு அதற்கு அனுமதி கொடுக்க தமிழக அரசு மறுத்தது. அதனால் உயர் நீதிமன்றம் சென்றபோது சில வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி அனுமதி கொடுக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்தது. அதை எதிர்த்து முறையீடு செய்ததில் அனுமதி கொடுக்க உத்தரவிடப்பட்டது.
உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதை விசரித்த நீதிமன்றம், ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்திக் கொள்ளலாம் என அனுமதி கொடுத்திருப்பது கவலை அளிப்பதாக இருக்கிறது. ஜனநாயக உரிமை என்பதற்காக கெட்ட நோக்கத்துக்குப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது.
தமிழகத்தில் அரசியல் சட்ட விதிகளை மீறி ஆளுநர் செயல்படுகிறார். போட்டி அரசியல்வாதி போன்று தமிழக அரசுக்கு எதிராக அவரது செயல்பாடுகள் இருக்கின்றன. தற்போது ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்துக்கு அனுமதி கொடுத்திருக்கிறார். அதை சில மாதங்களுக்கு முன்பே கொடுத்திருந்தால் தமிழகத்தில் 40 உயிர்கள் போயிருக்காது.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் சரகத்தில் உள்ள காவல் நிலையங்களில் ஐ.ஏ.எஸ் அதிகாரியான பல்வீர் சிங், விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கிய சம்பவத்தில் மனித உரிமை மீறல் அப்பட்டமாக உள்ளது. மனநோய் மருத்துவமனையில் இருக்க வேண்டிய அவரின் செயல்பாடுகள் கண்டனத்துக்குரியது. வெளிப்படையாக இந்த விவகாரத்தில் குற்றச் செயல் நடந்திருப்பது தெரிந்தும், பல்வீர் சிங்மீது இதுவரை ஏன் எஃப்.ஐ.ஆர்-கூட போடப்படவில்லை.
தமிழக அரசு இந்தச் சம்பவத்தில் ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என எனக்குப் புரியவில்லை. ஐ.பி.எஸ் அதிகாரியைக் கைதுசெய்ய தயங்குவதன் மூலம் காவல்துறையின் நிர்ப்பந்தத்துக்கு தமிழக அரசு பணிந்து போவது போல் தெரிகிறது. விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கிய பல்வீர் சிங்மீது மட்டுமல்லாமல், அவருக்கு உடந்தையாக இருந்த காவல்துறையினர்மீதும் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டு, கைதுசெய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் மார்க்சிஸ்ட் கட்சி களத்தில் இறங்கிப் போராடும். தேவைப்பட்டால் இதற்காக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்” என்றார்.