கள்ளக்குறிச்சி ஆட்சியர், தனது காலணியை உதவியாளரை எடுக்கச் சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரைத் திருவிழா வரும் 18ம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஷ்ரவண் குமார் ஜதாவத் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் ஆகிய இருவரும் ஆய்வு செய்தனர்.
அப்போது, கூத்தாண்டவர் கோயிலுக்கு செல்வதற்கு முன்பாக ஆட்சியர் ஷ்ரவண் குமார், தனது காலணியை கோயிலுக்கு வெளியே கழற்றினார். அப்போது, அங்கிருந்த தனது டவாலியை சைகை மூலம் அழைத்த அவர், தனது காலணியை எடுக்கச் சொல்லி உத்தரவிட்டார்.
வயதில் மூத்தவரான டவாலி ஆட்சியரின் ஷூவை கைகளால் எடுத்துச் சென்றார். தனது காலணியை உதவியாளரை வைத்து எடுக்க சொன்ன ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபோன்ற நிகழ்வுகள் வட மாநிலங்களில் அதிக அளவில் நடந்து வரும் சூழலில் தமிழ்நாட்டில் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட ஆட்சியருக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
newstm.in