கோழிக்கோடு — கண்ணுார் ரயிலில், பயணியர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற சம்பவத்தில், பெண் உள்ளிட்ட மூவர் இறந்தனர். இது தொடர்பாக, ஷாரூக் சைபி, 24, மகாராஷ்டிரா மாநிலம், ரத்தினகிரியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது, கேரள மாநிலம், கோழிக்கோடு மத்திய சிறையில் உள்ள மருத்துவ குழுவிடம், ஷாரூக் சிகிச்சை பெற்று வருகிறார். ஷாரூக்கிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து, போலீசார் கூறியதாவது:
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் செயல்படும் ஐ.எஸ்., பயங்கரவாதிகள், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள இளைஞர்களை மூளை சலவை செய்து, அவர்களை ஐ.எஸ்., திட்டங்களை செயல்படுத்தும் நபர்களாக மாற்றி வருகின்றனர்.
இப்படி செயல்படும் நுாற்றுக்கணக்கான இளைஞர்களில் ஒருவர் தான் ஷாருக். இவரது குடும்பம் டில்லி ஷாஹீன் பாக் பகுதியில் வசிக்கிறது.
மூளைச்சலவை
‘இந்தியாவில் ஹிந்துத்துவாவுக்கு, ஆட்சியில் இருப்பவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம் எனக்கு பிடிக்கவில்லை’ என, ஷாரூக் அவ்வப்போது கருத்து தெரிவித்து வந்துள்ளார். மேலும், ஐ.எஸ்., அமைப்போடு தொடர்புடைய சிலர், அவருக்கு அறிமுகம் ஆகியுள்ளனர். அவர்களால் ஷாரூக், மூளைச் சலவை செய்யப்பட்டார்.
கடந்த மாதம் 30ல், டில்லியில் இருந்து கேரளா வந்துள்ளார். இந்த மாதம் 2ல், கோழிக்கோடு – – கண்ணுார் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியுள்ளார். முன்னதாக, கோழிக்கோட்டில் சில பாட்டில்களில் பெட்ரோல் வாங்கி வைத்துள்ளார்.
ஏலாத்துார் — கோவிலடி ரயில் நிலையங்களுக்கு இடையே, இரவு 9:17 மணிக்கு காரப்புழா பாலம் கடந்ததும், ரயிலின் ‘டி- 1’ பெட்டியில் இருந்த ஷாருக், உடன் இருந்த பயணியர் மீது, பெட்ரோலை ஊற்றி, தீ வைத்துள்ளார்.
ஒட்டுமொத்த ரயிலும் எரிந்து நாசமாகும் என நினைத்தே, இந்த காரியத்தைச் செய்தார்; ஆனால், நினைத்தபடி நடக்கவில்லை. அந்த சம்பவத்தை நிறைவேற்றும் வரை, அவர் தன் சுய நினைவில் இல்லை.
விசாரணை
தீப்பிடித்ததும், பயணியர் சிலர் ரயிலை நிறுத்தினர். தீயில் இருந்து தப்பிக்க, சிலர் பெட்டிகளில் இருந்து வெளியே குதித்தனர். அந்த சமயத்தில் தான், மூன்று பேர் இறந்துள்ளனர்.
அங்கிருந்து தப்பிய ஷாரூக், அதே ரயிலில் வேறொரு பெட்டிக்கு சென்று அமர்ந்து விட்டார். உடலையும், தலையையும் போர்வையால் மூடியபடி இருந்தார். இரவு 11:30 மணிக்கு கண்ணுார் சென்றதும், போலீசார் உஷார்படுத்தப்பட்டு, ரயிலை சோதனையிட்டனர்.
யார் கண்ணிலும் படாமல், ஷாரூக் பதுங்கி விட்டார். பின், அதிகாலை 1:40 மணிக்கு கண்ணுாரில் இருந்து புறப்பட்ட மருசாகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி தப்பித்து, மகாராஷ்டிரா மாநிலத்துக்கு வந்துள்ளார். அங்கு ரத்னகிரியில் தங்கிய ஷாரூக், தனியார் மருத்துவமனை சென்றபோது, போலீசில் சிக்கினார்.
அடுத்தடுத்து பல்வேறு செயல்களை செய்ய திட்டமிட்டு, ஷாரூக்கை ஏவிய, ‘நெட்வொர்க்’கை உடைக்கும் தீவிரத்தில், தேசிய புலனாய்வு ஏஜென்சி எனப்படும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் இறங்கி உள்ளனர்.
கோவையில் நடந்த சிலிண்டர் குண்டு வெடிப்பு, மங்களூரில் நடந்த ‘குக்கர்’ குண்டு வெடிப்பு நிகழ்த்தியவர்களுடன் ஷாரூக்குக்கு தொடர்பு உள்ளதா என, விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.