வாஷிங்டன்,
உலகம் முழுவதும் தண்ணீரால் மூன்றாம் உலக போர் ஏற்படும் என்று சில காலங்களுக்கு முன்பு வரை அறிஞர்கள் கூறி வந்தனர். எனினும், கோடை காலங்கள் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது சுட்டெரிக்கும் வெப்பம், தண்ணீர் பற்றாக்குறை ஆகியவையே.
அதிலும், இந்தியாவின் பல பகுதிகளில் காலி குடங்களுடன் நீரை தேடி மக்கள் மணிக்கணக்காக அலையும் காட்சிகளும் கிடைக்க பெறுகின்றன. இவற்றில் தமிழகமும் தப்புவதில்லை.
இந்த நிலையில், உலகம் முழுவதும் பணக்காரர்களின் பெரிய நீச்சல் குளங்கள், புல்வெளி தளங்கள் ஆகியவற்றால் நகரின் ஏழை மக்கள் அடிப்படை குடிநீர் வசதி இன்றி தவிக்கின்றனர் என புதிய ஆய்வு தெரிவிக்கின்றது.
நேச்சர் சஸ்டெயினபிளிட்டி என்ற செய்தி இதழில் இந்த புதிய ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. இந்த ஆய்வில், சுவீடன், இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து நாடுகளை சேர்ந்த பல்கலை கழகங்களின் பேராசிரியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
அதன் அறிக்கையில், நகரங்களில் உள்ள பணக்காரர்கள் தங்களது நீச்சல் குளங்களை நிரப்புவது, மலர் தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுவது அல்லது தங்களது கார்களை தூய்மை செய்வது போன்ற தங்களது சொந்த, ஓய்வுநேர விசயங்களுக்காக அதிக அளவில் நீரை உபயோகிக்கின்றனர் என தெரிய வந்து உள்ளது.
ஆராய்ச்சி குழுவினர் மேற்கொண்ட ஆய்வு தகவலில், நகர்ப்புற குடிநீர் நெருக்கடி என்றால், பல வறுமை நிலையில் உள்ள மக்கள் குழாய்களோ அல்லது கழிவறைகளோ இன்றி இருப்பதுடன், குடிநீர் மற்றும் சுகாதார விசயங்களுக்காக குறைந்த அளவிலான நீரையே பயன்படுத்தி வரும் சூழல் காணப்படுகிறது என தெரிவிக்கின்றது.
ஆய்வின் ஒரு பகுதியாக ஈடுபட்டு உள்ள ரீடிங் பல்கலை கழகத்தின் பேராசிரியரான ஹன்னா குளோக் கூறும்போது, பருவகால மாற்றம் மற்றும் மக்கள் தொகை வளர்ச்சி ஆகியவற்றால், பெரிய நகரங்களில் தண்ணீரானது அதிக விலைமதிப்பு உடைய ஒன்றாக மாறி வருகிறது.
ஆனால், ஏழை மக்களுக்கு சமூக சமத்துவமின்மை ஒரு பெரிய பிரச்சனையாகி இருக்கிறது. அன்றாட தேவைகளுக்கான நீரை கூட அவர்களால் பெற முடிவதில்லை என ஹன்னா கூறுகிறார்.
இந்த சிக்கலான பிரச்சனை உலகம் முழுவதும் 80 நகரங்களில் காணப்படுகின்றன. அவற்றில் லண்டன், மியாமி, பார்சிலோனா, பீஜிங், டோக்கியோ, மெல்போர்ன், இஸ்தான்புல், கெய்ரோ, மாஸ்கோ, பெங்களூரு, சென்னை, ஜகர்த்தா, ரோம் உள்ளிட்ட நகரங்களும் அடங்கும்.
கடந்த 20 ஆண்டுகளாக வறட்சி மற்றும் நீர் பயன்பாட்டை தொடர செய்ய முடியாத நிலை ஆகியவற்றால், இந்த நகரங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.
உலகின் பல பகுதிகளில் பணக்காரர்கள் மற்றும் ஏழைகளுக்கு இடையேயான இந்த இடைவெளி அதிகரிக்கும்போது, இந்த நெருக்கடி இன்னும் மோசமடையும் என்று அவர் கூறியுள்ளார்.
நகரங்களில் நீர் பகிர்தலுக்கான முறையான வழிகளை நாம் மேம்படுத்தவில்லை எனில், ஒவ்வொருவரும் அதன் விளைவுகளால் பாதிக்கப்பட நேரிடும் என குளோக் கூறுகிறார்.
புதிய ஆய்வின்படி, சுற்றுச்சூழல் காரணிகளாக இருக்க கூடிய பருவகால மாற்றம் அல்லது நகர்ப்புற மக்கள் தொகை அதிகரிப்பு ஆகியவற்றை விட அதிக பாதிப்புகளை, குடிநீர் பிரச்சனைகளை, சமத்துவமற்ற சமூக விசயங்கள் நகர்ப்புறங்களில் ஏற்படுத்துகின்றன என தெரிவிக்கின்றது.