"பசு கோமியம் மனிதர்களுக்கு உகந்தது அல்ல".. அய்யோ இவ்வளவு கெடுதலா.. அப்போ ஜட்ஜு சொன்னது..? போச்சா..

பரேலி:
பசு கோமியம் (சிறுநீர்) மனிதர்கள் குடிப்பதற்கு உகந்தது அல்ல என்று இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனமே (ICAR) தெரிவித்துள்ளது.

உகந்தது அல்ல என்பதோடு மட்டுமல்லாமல் இதை அருந்தினால் மனிதர்களுக்கு பல மோசமான நோய்களும் ஏற்படும் எனவும் அந்நிறுவனம் எச்சரித்துள்ளது.

சுமார் 6 மாதங்களாக 70-க்கும் மேற்பட்ட பசுக்கள் மற்றும் எருமைகளின் சிறுநீரை கொண்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் இது தெரியவந்துள்ளது.

சர்வரோக நிவாரணியா..?

பசுக்களின் கோமியம் எனப்படும் சிறுநீரை குடித்தால் மனிதர்களுக்கு மிகவும் நல்லது என்ற ஒருவித பிரச்சாரம் இந்தியாவில் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, வலதுசாரி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்தக் கூற்றை ஆணித்தரமாக கூறி வருகிறார்கள். மனிதர்களுக்கு சர்வரோக நிவாரணியாக பசுக்களின் சிறுநீர் விளங்குவதாக கூறும் அவர்கள், அதை தினமும் குடிக்க வேண்டும் என்றும் வலிறுத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக பல விவாதங்கள் இன்றளவும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

நீதிபதி சொன்னதுதான் ஹைலைட்

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, குஜராத் நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு ஒரு கருத்தை தெரிவித்தது. பசு கடத்தல் தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த அங்குள்ள டாப்பி மாவட்ட நீதிமன்ற நீதிபதி, “பசு நமக்கெல்லாம் ஒரு தாயை போன்றது.. அதன் ரத்தம் பூமியில் சிந்தக்கூடாது. பசுவின் கோமியம் மனிதர்களுக்கு வரும் நோயை போக்குகிறது” எனத் தெரிவித்திருந்தார். எந்த அறிவியல் ஆதாரமும் இல்லாமல் நீதிபதி ஒருவரே இவ்வாறு கூறியது அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

ஆராய்ச்சியில் ‘பகீர்’

இந்த சூழலில்தான், உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஆரோக்கியமாக இருந்த பசுக்கள் மற்றும் எருமைகளின் சிறுநீரை ஆய்வு செய்ததில், மனிதர்களின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் 14 வகையான பாக்டீரியாக்கள் அதில் இருப்பது தெரியவந்தது. இந்த பாக்டீரியாக்கள் மனித உடலுக்குள் சென்றால் வயிறு மற்றும் குடல்களில் தொற்று உள்ளிட்ட பல்வேறு நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே, பசுக்களின் கோமியம் குடிப்பதற்கு உகந்தது அல்ல என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.