இட்டாநகர்:
அருணாச்சலப் பிரதேசத்தை குறிவைத்து சீனா காய் நகர்த்தி வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். அருணாச்சலப் பிரதேசத்தில் நேற்று பேசிய அவர், “இந்தியாவில் ஊசி முனை அளவு மண்ணை கூட எவராலும் எடுத்துச் செல்ல முடியாது” என அவர் தெரிவித்துள்ளார். அமித் ஷாவின் இந்த பேச்சு சீனாவுக்கு பயங்கர கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தின் மீது 1960-களில் இருந்தே கண் வைத்து வருகிறது சீனா. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் எல்லை சரியாக வரையறுக்கப்படாததால், தங்கள் நாட்டு பகுதியான அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் வசம் சென்றுவிட்டதாக அந்நாடு கூறி வருகிறது.
அதேபோல, அவ்வப்போது அருணாச்சல் எல்லைக்குள் நுழைவதும், அங்குள்ள இந்திய ராணுவத்தினரை தாக்குவதுமாக கடந்த காலங்களில் சீனா தனது சேட்டையை காண்பித்து வந்தது. இந்த சூழலில்தான், லடாக்கிலும், அருணாச்சலிலும் சமீபத்தில் அத்துமீறி நுழைந்த சீனப் படையினரை இந்திய ராணுவத்தினர் அடித்து விரட்டினர். இதில் சீன ராணுவ வீரர்கள் அதிக அளவில் உயிரிழந்தனர்.
அவமானத்துக்கு பழிதீர்க்க..
அமெரிக்காவுக்கு நிகராக தன்னை வல்லரசாக காட்டிக் கொள்ள எத்தனிக்கும் சீனா, இந்தியாவிடம் இரு முறை குட்டு வாங்கி ஓடியது, அந்நாட்டுக்கு சர்வதேச அளவில் பெரிய அவமானமாக மாறியது. இந்த அவமானத்துக்கு பழிதீர்க்க எப்படியும் அருணாச்சலப் பிரதேசத்தை கைப்பற்றி தீர வேண்டும் என்ற வெறியில் சீனா உள்ளது. இதன் காரணமாகவே, அருணாச்சல் எல்லைக்கு அருகே ஆயிரக்கணக்கிலான ராணுவ வீரர்களையும், பயங்கர ஆயுதத் தளவாடங்களையும் சீனா குவித்துள்ளது. அதற்கேற்ப, இந்தியாவும் அங்கு படைக்குவிப்பில் ஈடுபட்டுள்ளது.
பெயர் சூட்டிய சீனா
இவ்வாறு இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், கடந்த வாரம் அருணாச்சலில் உள்ள சில முக்கிய இடங்களுக்கு சீனா பெயரிட்டது. சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இதன் மூலம், அருணாச்சலப் பிரதேசத்தை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்பதை சீனா உறுதிப்படுத்த முயற்சிக்கிறது. சீனாவின் இந்த நடவடிக்கை அருணாச்சலப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது.
அருணாச்சலில் அமித் ஷா
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அருணாச்சலப் பிரதேசத்தில் நிலவும் சூழலை பார்வையிடுவதற்காக நேற்று அங்கு சென்றார். அப்போது, எல்லைப் பகுதிகளின் நிலவரம், பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். அதன் பின்னர், ராணுவ உயரதிகாரிகளிடம் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து, அங்கு பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசுகையில், “இந்திய மண்ணை எவர் வேண்டுமானாலும் ஆக்கிரமிக்கலாம் என்கிற நிலைமை, இப்போது மலையேறிவிட்டது.
“நினைத்துப் பார்க்கவே கூடாது”
இன்றைக்கு இந்தியாவின் நிலைமையே வேறு. இந்தியாவில் இருந்து ஊசி முனை அளவு மண்ணை கூட எவராலும் எடுத்துச் செல்ல முடியாது. அதுபோன்ற எண்ணத்தில் இருப்பவர்கள் தங்கள் ஆசையை கைவிட்டு விடுங்கள். அது என்றைக்கும் நடக்காது. அந்நியர்கள் எவரும் இந்தியப் பகுதிகளை அபகரிக்கும் நோக்கத்தில் பார்க்கக் கூட தற்போது முடியாது. அந்த அளவுக்கு இந்திய ராணுவத்தின் வலிமை உள்ளது. இந்தியாவின் கொள்கை ஒன்றுதான். எந்த நாட்டையும் அபகரிக்கவும் மாட்டோம்.. எங்கள் நாட்டின் ஒரு பிடி மண்ணை கூட விட்டுத்தர மாட்டோம். இதனை அண்டை நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கையாகவே கூறிக் கொள்கிறேன்” என அமித் ஷா பேசினார்.