எம்.பி பதவி பறிக்கப்பட்ட பிறகு முதன் முறையாக, தான் எம்.பி-ஆக இருந்த தொகுதியான வயநாட்டுக்கு நேற்று வந்தார் ராகுல் காந்தி. தனது சகோதரி பிரியங்காவுடன் வந்திருந்த ராகுலுக்கு வயநாடு தொகுதி மக்களும், காங்கிரஸ் கட்சியினரும் பெருமளவில் திரண்டு வரவேற்பு அளித்தனர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வயநாட்டில் போட்டியிட ராகுல் முதன் முறையாக வந்த சமயத்தில் எவ்வளவு கூட்டம் கூடியதோ அதே அளவு மக்கள் திரண்டு வரவேற்றனர் என்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள்.
ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் வந்திறங்கிய கல்ப்பற்றா முதல் பொதுக்கூட்டம் நடந்த மைதானம் வரை அவர் பேரணியாக சென்றார். பேரணி சென்ற வாகனத்தில் `வாய்மையே வெல்லும்’ என எழுதப்பட்டிருந்தது. அப்போது, ‘எங்கள் வீடு உங்களுக்கு ராகுல் ஜி’ என தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். பின்னர் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், “நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான் உங்களை காண வந்தேன், நாடாளுமன்ற உறுப்பினராக ஆனேன். எனது தேர்தல் பிரசாரம் வித்தியாசமானது. சாதாரணமாக எனது பிரசாரத்தில் நான் என் செயல்பாடுகள் குறித்து பேசுவேன். ஆனால், நான் கேரளாவுக்கு வந்தபோது உங்கள் சகோதரன் என்ற உணர்வு ஏற்பட்டது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆகவேண்டுமானால் பல்வேறு குணாதிசயங்கள் வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினராக மக்களின் தேவைகள், மக்களிம் துன்பம், வருத்தங்களை உணர்ந்துகொள்ள வேண்டும். மக்களின் இதயங்களை உணர்ந்துகொள்ளவேண்டும். மக்கள் சமமானவர்கள் எனவும், சில சமயம் மக்களை நம்மைவிட மேலான இடத்தில் வைக்க வேண்டும்.
ஒருவரின் சுய நலன்களை விட்டுவிட்டுதான் மக்கள் பிரதிநிதி ஆகமுடியும். நாம் எதற்கும் பயப்படாமல் செயல்பட வேண்டும். எம்.பி பதவி என்பது ஒரு முகவரி மட்டும்தான். பா.ஜ.க-வால் எனது எம்.பி பதவி என்ற முகவரியை மட்டும்தான் பறிக்க மட்டுமே முடியும். எனது வீட்டை திரும்பப்பெற அவர்களால் முடியும், என்னை சிறையில் அடைக்கவும் அவர்களால் முடியலாம்.
ஆனால் வயநாடு மக்களிடம் நான் பேசுவதை தடுக்க பா.ஜ.க-வால் முடியாது. சுதந்திரமான நாட்டில் வாழ இந்திய மக்களும், வயநாட்டு மக்களும் நினைக்கிறார்கள். தங்கள் குழந்தைகள் விரும்பும் பாதையில் பயணிக்க வேண்டும் என இங்குள்ள குடிமகன்கள் விரும்புகின்றனர். தன் பிள்ளைகளை இன்ஜினியராகவோ, பிசினஸ்மேனாகவோ மாற்ற விரும்பினால் அதை செயல்படுத்த முடியும் என்ற தேசத்தைதான் இங்குள்ள மக்கள் விரும்புகின்றனர். ஆனால், கேவலம் நான்கைந்துபேருக்கு சொந்தமான நாட்டில் வாழ மக்கள் விரும்பவில்லை. இந்த விஷயங்களை மக்களுக்கு சொல்லவே வயநாட்டின் மக்கள் பிரதிநிதி என்றவகையில் நான் விரும்புகிறேன்.
நான் பல ஆண்டுகளாக பா.ஜ.க-வுக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வருகிறேன். பல ஆண்டுகளாக எனது போராட்டத்தைக் குறித்து புரிந்துகொள்ளக்கூட அவர்களால் முடியவில்லை. அவர்களது எதிரி ஒருவிதத்திலும் பயப்படும் நபர் அல்ல என்பது அவர்களுக்கு புரியவில்லை. இந்த யதார்த்தத்தை அவர்கள் புரிந்துகொள்ளாதது என்ன ஆச்சர்யப்படுத்துகிறது. எனது அரசு குடியிருப்பில் போலீஸை அனுப்பினால் நான் பயப்படுவேன் என அவர்கள் நினைக்கிறார்கள். என் வீடு பறிக்கப்பட்டால் நிலைகுலைந்துபோவேன் என நினைக்கிறார்கள். அந்த வீட்டில் வசிப்பது எனக்கு மகிழ்ச்சி அல்ல.
மழை வெள்ள பிரளயத்தின்போது வயநாட்டில் நூற்றுக்கணக்கான மக்கள் வீடு இழந்ததை நான் கண்டேன். பேரிடருக்கு எதிராக நீங்கள் போராடியதை நான் பார்த்தேன். என் வீட்டை ஐம்பது முறை பறித்தெடுத்தாலும் நான் கவலைப்படமாட்டேன், பயப்படமாட்டேன். இந்திய மக்களின், வயநாட்டு மக்களின் குரலாக நான் ஒலித்துக்கொண்டே இருப்பேன்.
பா.ஜ.க மக்களுக்குள் பிரிவினையையும், பயத்தையும் ஏற்படுத்துகிறது. நான் மக்களோடு இருக்கிறேன். நான் வயநட்டின் எம்.பி-யாக இருந்தாலும் இல்லாமல் இருந்தாலும் மக்களின் அடிப்படை கோரிக்கைக்காக நான் குரல் கொடுப்பேன். எனது எம்.பி பதவி பறிக்கப்பட்டதால் நம்முடைய பந்தம் முடிந்துபோனது என நீங்கள் நினைக்க வேண்டாம். இரண்டோ மூன்றோ வருடங்கள் பற்றி நான் பேசவில்லை. என் உயிர் உள்ளவரை நான் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளேன். அவர்கள் என்னை பிடித்து சிறையில் அடைத்தாலும் வயநாட்டுடனான எனது பந்தம் என்றும் இருக்கும்.
அதானியுடனான பந்தம் குறித்து பிரதமரிடம் நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாக கேள்வி கேட்டேன். அதானி இரண்டாம் இடத்துக்கு வந்தது எப்படி எனவும், அவருக்கு பிரதமர் உதவியதுகுறித்தும் கேட்டேன். இந்தியா- இஸ்ரேல் ராணுவ ஒப்பந்தம் அதானியின் கைக்கு மாற்றப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பினேன். ஏர்போர்ட் சட்டங்களில் மாற்றம் ஏற்படுத்தியது குறித்தும், அவருடனான நட்புகுறித்தும் கேள்வி கேட்டேன். பிரதமரிடம் பதில் இல்லை.
பா.ஜ.க அமைச்சர்களே நாடாளுமன்றத்தை முடக்கினார்கள். நாடாளுமன்றத்தில் தனி நபருக்கு எதிராக குற்றச்சாட்டு இருந்தால், அவர் விளக்கம் அளிக்க சட்டத்தில் இடம் உண்டு. நான் சபாநாயகரிடம் சட்டம் பற்றி கூறி, விளக்கம் அளிக்க வாய்ப்பு கேட்டேன். சபாநாயகரின் அலுவலகத்துக்குச் சென்றும் கேட்டேன். அதற்கு அவர் தனக்கு வேறு வழி இல்லை எனச்சொன்னார். எனக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் கேள்விகேட்டதால் நிலைகுலைந்த அவர்கள் என்னை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றினார்கள். என்னை தகுதி நீக்கம் செய்ததை எனக்கு கிடைத்த வாய்ப்பாக கருதுகிறேன்.
என் பதவியை பறித்தபோதும், என்னை பா.ஜ.க-வினர் எதிர்க்கும்போது நான் சரியான பாதையில் செல்கிறேன் என உணர்ந்து கொள்கிறேன். என்ன நடந்தாலும் நான் என் செயல்பாட்டை மாறிக்கொள்ளமாட்டேன். இது எனக்காக அல்ல, இந்த நாட்டின் மீதான அக்கறையால் செய்கிறேன். என்னுடைய எம்.பி பதவிக்கும் நமக்கும் உள்ள பந்தத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதையும் தாண்டியது நமது பந்தம். பதவி பறிக்கப்பட்டதால் நம் பந்தம் இன்னும் ஆழமாகச்செல்லும். நம் பந்தம் குடும்ப பந்தமாகும். அது மாறாது. உங்கள் அன்புக்கு நன்றி” என்றார்.