கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டராக ஷ்ரவன் குமார் ஜடாவத் உள்ள நிலையில் பொதுமக்களின் முன்னிலையில் தனது ஷூவை எடுத்து செல்லும்படி டவாலியிடம் கூறினார். இதையடுத்து டவாலி கையால் அவரது ஷூவை எடுத்து சென்ற சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில் கலெக்டர் ஷ்ரவன் குமார் ஜடாவத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டராக ஷ்ரவன் குமார் ஜடாவத் உள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தான் பிரபலமான கூவாகம் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அமைந்துள்ளது.
இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா மிகவும் பிரசித்திப்பெற்றது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து திருநங்கைகள் இந்த கோவிலுக்கு வந்து வழிபாடு மேற்கொள்வார்கள்.
அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா வரும் 18 ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தான் கலெக்டர் ஷ்ரவன் குமார் ஜடாவத் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். அவருடன் எஸ்பி மோகன்ராஜ் உள்பட பிற அதிகாரிகள் இருந்தனர்.
அப்போது கூத்தாண்டவர் கோவிலுக்குள் செல்வதற்காக ஷ்ரவன் குமார் ஜடாவத் தயாரானார். அப்போது அவர் தனது ஷூவை கோவிலுக்கு வெளியே கழற்றினார். இந்த சந்தர்ப்பத்தில் அவர் தனது உதவியாளரான டவாலியை(டபேதார்) சைகை மூலம் அழைத்து தனது ஷூவை எடுத்து செல்லும்படி கூறினார்.
இதையடுத்து கலெக்டர் கூறிவிட்டாரே என டவாலி கூட்டத்துக்கு நடுவே வேகமாக ஓடிவந்து ஷூவை கையால் எடுத்து சென்றார். இதையடுத்து கலெக்டர் ஷ்ரவன் குமார் ஜடாவத் கோவிலுக்குள் சென்றார். இந்த சம்பவத்தால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே டவாலியை தனது ஷூவை எடுத்து செல்ல கலெக்டர் ஷ்ரவன் குமார் ஜடாவத் சைகை மூலம் அழைத்தது, டவாலி ஷூவை எடுத்து சென்றது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியானது. இதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கலெக்டர் ஷ்ரவன் குமார் ஜதாவத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.