இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ‘வானம் கலைத் திருவிழா’ கடந்த ஏப்ரல் 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இவ்விழாவின் ஒருபகுதியாக ஏப்ரல் 7-9ம் தேதி வரை `PK ரோசி திரைப்பட விழா’ சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெறுகிறது. இதில் `ஜெய் பீம்’, `நட்சத்திரம் நகர்கிறது’, `விட்னஸ்’ மற்றும் ஆவணப்படங்கள், குறும்படங்கள் எனப் பல திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. இன்று நடைபெறும் இவ்விழாவில் பா.ரஞ்சித், தியாகராஜன் குமாரராஜா, லெனின் பாரதி, மாரி செல்வராஜ், அறிவு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பேசிய இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, “‘rat paradise experiment’ என்று அமெரிக்காவில் பரிசோதனை ஒன்றை நடத்தினார்கள். அதில் எல்லா சொகுசு வசதிகளுடன் கூடிய ஒரு குறிபிட்ட இடத்தில் எட்டு ஜோடி எலிகளை விட்டுவிடுகிறார்கள். அங்கு சாப்பாடு, விளையாடுவதற்கான இடம் என வாழ்வதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் அங்கு இருக்கின்றன. சில நாட்களில் அந்த எலிகள் அனைத்தும் பல மடங்காக அதிகரிக்கின்றன. ஆனால், இறுதியில் சுமார் 600 நாட்களில் அனைத்து எலிகளும் இறந்துவிடுகின்றன.
அதற்குக் காரணம் அனைத்து வசதிகளுடனும் வாழ்ந்ததால் அந்த எலிகளுக்குப் போராட்ட குணமே இல்லாமல் போய்விட்டது. எனவே, நாம் போராடுவதை எப்போதும் நிறுத்தக்கூடாது, தொடர்ந்து போராட வேண்டும். நம் குரல் கேட்டுக்கோண்டே இருக்க வேண்டும். இந்த நீலம் பண்பாட்டு இயக்கமும், வானமும், நீலமும், கூகையும், ரஞ்சித்தும் அதை தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறார்கள். இந்தப் போரட்டங்களின் அடையாளங்களாக இவை இருக்கின்றன. இதற்கு என்னால் முடிந்த ஆதரவை எப்போதும் செய்வேன். எப்போது கூடவே இருப்பேன்” என்று கூறினார்.