நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு இறுதித் தேர்வு நடந்து வரும் சூழலில் எப்போது விடுமுறை விடப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதிலும் தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகள், அங்கன்வாடி செல்லும் குழந்தைகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் ஒடிசா அரசு சற்றே ஆறுதல் அளிக்கும் முடிவை எடுத்துள்ளது. அதாவது, அதிகரித்து வரும் வெப்ப அலை காரணமாக அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் ஏப்ரல் 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி விடுமுறை விடப்படுகிறது. இந்த அறிவிப்பு 10ஆம் வகுப்பு வரை மட்டுமே செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்கள் வழக்கம் போல் பள்ளிகளுக்கு செல்ல வேண்டும் எனத் தெரிகிறது.