புதுடெல்லி: ஆந்திராவில் மாநில கட்சி அந்தஸ்தை பிஆர்எஸ் கட்சி இழந்துள்ளது. இதேபோல உத்தர பிரதேசத்தில் ஆர்எல்டி கட்சி மாநில கட்சிக்கான அந்தஸ்தை இழந்திருக்கிறது.
கடந்த ஆண்டு அக்டோபரில் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சியின் பெயர், பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) என்று மாற்றப்பட்டது. இதன்மூலம் தேசிய அரசியலில் ஈடுபட போவதாக தெலங்கானா முதல்வரும் பிஆர்எஸ்கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் அறிவித்தார்.
தற்போது தெலங்கானாவில் ஆளும் கட்சியாக இருக்கும் பிஆர்எஸ் ஆந்திராவில் மாநில கட்சி அந்தஸ்தை பெற்றிருந்தது. கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தல், ஆந்திர மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தலில் அப்போதைய தெலங்கானா ராஷ்டிர சமிதி போட்டியிடவில்லை. இதன் காரணமாக ஆந்திராவில் மாநில கட்சி அந்தஸ்தை பிஆர்எஸ் இழந்துள்ளது.
முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் மகன் அஜித் சிங் கடந்த 1996-ம் ஆண்டு ராஷ்டிரிய லோக் தளம் (ஆர்எல்டி) கட்சியை தொடங்கினார். கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆர்எல்டி போட்டியிட்டது. ஆனால் 8 தொகுதிகளில் மட்டுமே அந்த கட்சி வெற்றி பெற்றது. போதிய வாக்கு சதவீதத்தையும் பெறவில்லை. இதன் காரணமாக உத்தர பிரதேசத்தில் மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை ஆர்எல்டி இழந்திருக்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கருத்து: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்தேசிய அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக அந்தகட்சி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டின் பழமையான அரசியல் கட்சிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஒன்றாகும். நாடு முழுவதும் கட்சிக்கு செல்வாக்கு உள்ளது. பெருந்திரளான தொண்டர்கள், ஆதரவாளர்கள் உள்ளனர். கட்சியின் நீண்ட வரலாறு, ஆங்கிலேயருக்கு எதிரான போரில் கட்சியின் பங்களிப்பு, சுதந்திர கால இந்தியாவில் கட்சியின் பங்களிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டுதலைமை தேர்தல் ஆணையம் முடிவு எடுத்திருக்க வேண்டும்.
மக்களின் உரிமைக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து குரல் எழுப்பும். தேர்தல் சீர்திருத்தங்களை வலியுறுத்தி தீவிர பிரச்சாரம் மேற்கொள்வோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.