சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அமலுக்கு வந்துள்ளது. தடையை மீறி விளையாடினால் சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படும்.
கடந்த அதிமுக ஆட்சியின்போது, சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது. இணையதள விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்கள், நீதிமன்றம் சென்றதால், சட்டத்தை ரத்து செய்த நீதிமன்றம், புதிய சட்டம் கொண்டுவரலாம் என்று தெரிவித்தது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக அரசு பொறுப்பேற்றதும், கடந்த ஆண்டு இறுதியில் ஆன்லைன் விளையாட்டுகளின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய முன்னாள் நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில், ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுடன் ‘தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தை தடை செய்தல், ஒழுங்குபடுத்துதல் அவசர சட்டம்’ கடந்த ஆண்டு அக்.1-ம் தேதி பிறப்பிக்கப்பட்டது.
பின்னர், அவசர சட்ட மசோதாவுக்கு பதிலாக, அதில் உள்ள ஷரத்துகளில் எந்த மாற்றமும் செய்யாமல், சட்டப்பேரவையில் கடந்த அக்.19-ம் தேதி மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. 131 நாட்கள் கழித்து ஆளுநர் அந்த மசோதாவை கடந்த மார்ச் 6-ம் தேதி அரசுக்கு திருப்பி அனுப்பினார். கடந்த மார்ச் 23-ம் தேதி சட்டப்பேரவையில்மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு அடுத்த நாளே ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 10-ம் தேதி மாலையில் ஒப்புதல் அளித்தார். சட்டம் உடனடியாக அரசிதழில் வெளியிடப்பட்டது. இதையடுத்து, ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து, ஆன்லைன் சூதாட்ட செயலி, இணையதளங்களை கணக்கெடுப்பது, தடை விதிக்க வேண்டிய விளையாட்டுகளின் பட்டியலை தயாரிக்கும் பணியில் சைபர் க்ரைம் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சட்டத்தின்படி, ஆன்லைன் விளையாட்டு விளையாடுவோருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதத்துடன் சிறை தண்டனை விதிக்கப்படும்.
ஆன்லைன் விளையாட்டுக்கு விளம்பரம் செய்வோருக்கு ஓராண்டு சிறை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
இதுபோன்ற விளையாட்டுகளை அளிப்போருக்கு 3 ஆண்டு சிறை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். இவர்கள் மீண்டும் தவறு செய்தால், 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.