சென்னை: Rudhran Lyrical Video (ருத்ரன் லிரிக்கல் வீடியோ) ருத்ரன் படத்தில் இடம்பெற்றிருக்கும் ஜொர்த்தால பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது
க்ரூப் டான்ஸராக தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கி பின்னர் நடன அமைப்பாளர், இயக்குநர், நடிகர் என பல அவதாரங்களை எடுத்தவர் ராகவா லாரன்ஸ். சினிமாவோடு மட்டும் நின்றுகொள்ளாமல் தன்னால் முடிந்த உதவிகளை பலருக்கும் செய்துவருகிறார். இதனால் பலரிடம் பாராட்டையும் பெற்றவர் லாரன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகர் மட்டுமின்றி அவரைப் போலவே ராகவேந்திரரின் தீவிர பக்தரும்கூட.
லாரன்ஸின் அவதாரங்கள்: ஒரு சில பாடல்களில் தலை காட்டிய லாரன்ஸ் அற்புதம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பிறகு தெலுங்கில் படம் இயக்கிய அவர் முனி படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து அவர் இயக்கிய காஞ்சனா, காஞ்சனா 2 ஆகிய படங்கள் மெகா ஹிட்டாகின. எனவே முன்னணி இயக்குநர் என்ற அந்தஸ்தை பெற்றார். காஞ்சனா படமானது ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. அங்கும் லாரன்ஸே படத்தை இயக்கினார். அடுத்ததாக அவர் இயக்கிய காஞ்சனா 3 தோல்வியை சந்தித்தது.
ருத்ரன்: ஏறத்தாழ மூன்று வருடங்களுக்கு பிறகு லாரன்ஸ் இப்போது ருத்ரன் படத்தில் நடித்திருக்கிறார். தயாரிப்பாளர் கதிரேசன் இயக்குநராக இப்படம் மூலம் அறிமுகமாகியிருக்கிறார். ப்ரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் பிரமாண்டமாக நடந்தது. படத்தின் ட்ரெய்லரை பார்க்கையில் படம் பக்கா ஆக்ஷன் பேக்கேஜாக உருவாகியிருப்பது போல் தோன்றுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.
லிரிக்கல் வீடியோ: இந்நிலையில் ருத்ரன் படத்தில் இடம்பெற்றிருக்கும் ஜொர்த்தால பாடலின் லிரிக்கல் வீடியோவை ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். பாடலை பிக்பாஸ் புகழ் அசல் கோலார் எழுதி பாடியிருக்கிறார். அவருடன் இணைந்து ஓஃப்ரோ, எம்.சி.விக்கி ஆகியோர் பாடியிருக்கின்றனர்.
லாரன்ஸின் வெறித்தனமான நடனத்தில் பாடல் உருவாகியிருக்கிறது. அசல் கோலாரின் வரிகளும், அவரது குரலும் பாடலுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன. இந்தப் பாடலின் லிரிக்கல் வீடியோ இப்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
டப்பிங் உரிமை: முன்னதாக, படம் தமிழ் புத்தாண்டையொட்டி ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால் ரெவன்ஸா குளோபல் வென்சர்ஸ் நிறுவனத்துடனான ருத்ரன் படத்தின் ஹிந்தி மற்றும் பிற மொழி டப்பிங் உரிமைக்கான ஒப்பந்தத்தை தயாரிப்பு தரப்பு ரத்து செய்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நிறுவனம் படத்தை வெளியிட தடை செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ருத்ரன் படத்தை ஏப்ரல் 24ஆம் தேதிவரை ரிலீஸ் செய்ய தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.