கோட்டயம்: கடந்த வாரம் ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதற்கு முன்னதாக டெல்லியில் நடைபெற்ற ஈஸ்டர் விழாவுக்காக, கேரள சிரியன் சர்ச் தலைவர் 3-ம் பசிலியோ மார்த்தோமா மேத்யூஸ் டெல்லியில் ஒரு வாரம் தங்கி இருந்தார்.
அப்போது, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோரை சர்ச் குழுவினருடன் மேத்யூஸ் சந்தித்துப் பேசினார். இந்நிலையில் கேரளாவின் தேவலோகம் பகுதியில் உள்ள சர்ச்சின் தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் மேத்யூஸ் கூறியதாவது: பிரதமர் மோடி அரசால் எங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. நாங்கள் இயல்பாகவே உணர்கிறோம். ஆனால், மற்ற கிறிஸ்தவ பிரிவினருக்கு நிலைமை அப்படி இல்லை. குறிப்பாக கத்தோலிக்க சர்ச்சுகளுக்கு எதிராக சம்பவங்கள் நடைபெறுகின்றன.
மற்ற கிறிஸ்தவ பிரிவினர் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து பாஜக, ஆர்எஸ்எஸ் தலைவர்களுடன் பேசினேன். கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களை கண்டிக்க வேண்டும். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களிடம் நாங்கள் வலியுறுத்தினோம். மேலும், கிறிஸ்தவர்கள் மீதான பல தாக்குதலில் வழக்குகள் கூட பதிவு செய்யப்படுவதில்லை. எனினும், பிரதமர் மோடி தலைமையிலான அரசின் கீழ் நாங்கள் எந்த கசப்பான அனுபவங்களையும் இதுவரை சந்தித்தது இல்லை.
உண்மையில் பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்தது சுமூகமானதாக இயல்பானதாகவே இருந்தது. அதேவேளையில் தவறான நடவடிக்கைகளை நாங்கள் சுட்டிக் காட்டுவோம், விமர்சனம் செய்வோம். பாஜக என்றால் என்ன, அவர்களுடைய செயல்பாடுகள் என்ன என்பது அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் தெரியும். கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினராக உள்ளனர். அவர்களின் பாதுகாப்புக்கான நடவடிக்கை பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடம் இருந்து வரவேண்டும். அப்படி செய்தால் தானாகவே கிறிஸ்தவர்களிடம் இருந்து பாஜக.வுக்கு மதிப்பு கூடும்.
அதேவேளையில் நாட்டில் ஏழைகளுக்காக பல திட்டங்களை பாஜக சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. ஊரக வேலைவாய்ப்பு திட்டம், ஆஷா பணியாளர்கள் என பல திட்டங்களை உதாரணம் காட்டலாம். பாஜக அரசின் அந்தப் பணிகளையும் நாம் அங்கீகரிக்க வேண்டும். காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் அந்தோணி காங்கிரஸில் இருந்து விலகி பாஜக.வில் சேர்ந்தது அவரது சுதந்திரம். காங்கிரஸ் கட்சியில் அவரால் ஏன் இருக்க முடியவில்லை என்பது குறித்து அந்தக் கட்சி சிந்திக்க வேண்டும்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஏனெனில், வலிமையான எதிர்க்கட்சியே இல்லை. தற்போதைய சூழ்நிலையில் எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைவதற்கான சாத்திய கூறுகளும் இல்லை. ஆர்த்தோடக்ஸ் சர்ச்சைபொறுத்த வரையில் எந்த அரசியல் நிலையும் எடுக்கவில்லை. இவ்வாறு பசிலியோ மார்த்தோமா மேத்யூஸ் கூறினார்.