சென்னை: Soori (சூரி) வாய்ப்பு தேடி போன அலுவலகத்தையே நடிகர் சூரி விலைக்கு வாங்கியிருக்கும் சம்பவம் தெரியவந்திருக்கிறது.
ஏழாம் வகுப்பு வரை படித்த சூரி சினிமா மீது இருக்கும் ஆர்வத்தால் சென்னைக்கு கிளம்பி வந்தார். எல்லோரையும் படுத்தும் சினிமா சூரியை கொஞ்சம் அதிகமாகவே படுத்தியது. இருந்தாலும் சினிமா மீது இருக்கும் காதலால் சினிமா சம்பந்தப்பட்ட எந்த வேலையாக இருந்தாலும் செய்ய ஆரம்பித்தார் சூரி. அவரைப் பொறுத்தவரை சினிமாவுக்கு சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒன்று செய்துகொண்டிருந்தால் சினிமா கைவிடாது என்பது திண்ணமான நம்பிக்கை.
திரையில் சூரி: செட் அசிஸ்டெண்ட், ஆர்ட் அசிஸ்டெண்ட் என கிடைத்த வேலைகளை எல்லாம் இழுத்துப்போட்டு செய்தார் சூரி. சங்கமம் படத்தில் ஐந்து சிறுவர்கள் புலி வேஷம் கட்டி மணிவண்ணனோடு ஆடுவார்களே அந்த சிறுவர்களுக்கு புலி போல் வேஷம் போட்டு விட்டது சூரி. மேலும் அந்தப் பாடலில் சில நொடிகள் திரையிலும் தோன்றுவார் சூரி. இப்படி தீபாவளி, வின்னர் போன்ற படங்களில் தலை காட்டியுள்ளார். திரைப்படங்கள் மட்டுமின்றி சின்னத்திரையிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார்.
புரோட்டா சூரி: சினிமாவை நம்பி உண்மையாக உழைத்தால் சினிமா நிச்சயம் கைவிடாது என்பதுதான் விதி. அந்த சினிமா சூரியையும் கைவிடவில்லை. பல வருட நடிப்பு பசியில் கிடந்தவருக்கு சுசீந்திரன் புரோட்டா மூலம் சூரியின் பசியை ஆற்றினார். 50 புரோட்டாக்களை உண்ணும் காட்சியில் சூரி அதகளம் செய்ய, வெண்ணிலா கபடிக்குழு படத்துக்கு அந்த சீன் அடையாளம் ஆனது. கூடவே சூரியும் அடையாளப்பட்டார்.
முன்னணி காமெடி நடிகர்: வெண்ணிலா கபடிக்குழுவிலிருந்து தனியே தெரிந்த சூரிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி தனது காமெடி திறமையை காட்ட சரசரவென்று முன்னணி நடிகர் என்ற இடத்துக்கு உயர்ந்தார். அதன் பலனாக ரஜினி, அஜித், விஜய், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி என முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தார். முக்கியமாக சிவகார்த்திகேயனுடன் அவர் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் பட்டாசாக இருந்தன.
விடுதலை சூரி: காமெடி நடிகராக வலம் வந்த சூரியை வெற்றிமாறன் விடுதலை படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தியிருக்கிறார். சமீபத்தில் வெளியான அந்தப் படத்தில் சூரியின் நடிப்பை பார்த்த ரசிகர்கள்; அவர் வெறும் காமெடி ஆர்ட்டிஸ்ட் மட்டுமில்லை என்பதை உணர்ந்துகொண்டனர். ஆக்ஷன் காட்சிகளில் அசால்ட்டாக ரிஸ்க் எடுத்திருக்கும் சூரிக்கு விடுதலை அடுத்த அடையாளமாக மாறியிருக்கிறது. இப்படி டாப்பில் இருக்கும் சூரி வாய்ப்பு தேடி போன அலுவலகத்தையே விலைக்கு வாங்கிய சம்பவம் நடந்திருக்கிறது.
கலாபக் காதலன்: ஆர்யா நடித்த படம் கலாபக் காதலன். அந்தப் படத்தில் நடிப்பதற்காக சூரி வாய்ப்பு தேடி சென்றிருக்கிறார். ஆடிஷனில் கலந்துகொண்ட அவரிடம் நடித்து காண்பிக்க சொல்லியிருக்கிறார்கள். நடிக்க ஆரம்பிக்கும்போது மயக்கம் போட்டு கீழே விழுந்திருக்கிறார் சூரி. தண்ணீர் தெளித்து எழுப்பி என்ன ஆச்சு என அங்கிருந்தவர்கள் கேட்க இரண்டு நாள்களாக சாப்பிடவில்லை அதான் மயக்கம் வந்துடுச்சு. பரவால்ல நடிக்கிறேன் என சொல்லியிருக்கிறார் சூரி. ஆனால் அங்கிருந்தவர்கள் சாப்பாடு வாங்கி கொடுத்து சூரியை அனுப்பிவிட்டார்களாம்.
விலைக்கு வாங்கிய சம்பவம்: நாள்கள் நகர்ந்து சூரி டாப் நடிகராக வலம் வர ஆரம்பித்த பிறகு அவருக்கென்று ஒரு அலுவலகம் தேவைப்பட்டிருக்கிறது. தனக்கு தெரிந்தவரிடம் இந்த விவரத்தை சொல்ல அவரும் சூரிக்காக அலுவலகம் பார்க்கும் பணியில் இறங்கி ஒரு கட்டடத்தை ஃபிக்ஸ் செய்திருக்கிறார்.
ஒருநாள் படப்பிடிப்பை முடித்த பிறகு அந்தக் கட்டடத்தை காண்பிப்பதற்கு அவர் சூரியை அழைத்து சென்றிருக்கிறார். அவருடன் சென்ற சூரிக்கு செம ஷாக். ஏனெனில் அந்த நபர் சூரிக்காக பார்த்து வைத்திருந்த கட்டடம் கலாபக் காதலன் ஆடிஷன் நடந்து உணவுக்கு வழியில்லாமல் சூரி மயங்கி விழுந்த கட்டடம். இதனை பார்த்து நெகிழ்ந்துபோன சூரி உடனடியாக அந்தக் கட்டடத்தை வாங்கியிருக்கிறார். அதுதான் இப்போது சூரியின் அலுவலகமும்கூட.