வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புவனேஸ்வர்: மும்பையில் இறந்து போன இருவரின் உடல்களை, ‘கூரியர்’ நிறுவனம் முகவரி மாற்றி ஒப்படைத்த நிலையில், ஒரு குடும்பத்தினர் உடலை தவறாக தகனம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசாவின் கட்டாக் மாவட்டம், குவானசாலா கிராமத்தைச் சேர்ந்தவர் பிலாஷ் புயான். இவர், மஹாராஷ்டிராவின் மும்பையில் பணியாற்றி வந்தார். சில வாரங்களுக்கு முன் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு இவர் உயிரிழந்தார். இவரது உடல் கூரியர் நிறுவனம் வாயிலாக, மும்பையில் இருந்து கட்டாக் அனுப்பி வைக்கப்பட்டது. உடலை பெற்ற குடும்பத்தினர் 10ம் தேதி மாலை தகனம் செய்தனர்.
முகவரி மாற்றம்
இந்நிலையில், பிலாஷ் வீட்டுக்கு வந்த ஒடிசா போலீசார், ‘நீங்கள் தகனம் செய்தது பிலாஷ் உடல் அல்ல. அது, ராஜஸ்தானைச் சேர்ந்தவரின் உடல்’ என, தெரிவித்தனர். மும்பையில் இருந்து பிலாஷின் உடலை அனுப்பிய நாளில், ராஜஸ்தானைச் சேர்ந்த மற்றொரு நபரின் உடலையும் அந்த கூரியர் நிறுவனம் அனுப்பி உள்ளது. அப்போது, சவப்பெட்டியில் முகவரிகள் மாற்றி ஒட்டப்பட்டுள்ளன. இந்த தவறால் ஒடிசா செல்ல வேண்டிய உடல் ராஜஸ்தானுக்கும், ராஜஸ்தான் செல்ல வேண்டிய உடல் ஒடிசாவுக்கும் சென்றது தெரியவந்தது.
குழப்பம்
ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் இந்த தவறை கண்டுபிடித்து மும்பை போலீசில் புகார் அளித்தனர். அப்போது தான் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. பிலாஷின் உடலை பெற்றுக்கொண்டதும் அவரது குடும்பத்தினருக்கு முதலில் குழப்பம் இருந்து உள்ளது. ஆனாலும் அந்த முகம் பிலாஷின் சாயலில் இருந்ததாலும், இறந்து சில நாட்கள் ஆனதால் முகம் மாறியிருக்க வாய்ப்புள்ளதாகவும் கருதி அவர்கள் தகனம் செய்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் பிலாஷ் புயானின் உடலை ஒப்படைத்துவிட்டு, ஒடிசாவில் இருந்து தங்கள் உறவனரின் அஸ்தியை எடுத்து சென்றனர்.
Advertisement