கொழும்பு : காங்கேசன்துறை துறைமுக உட்கட்டமைப்பு விரிவாக்கப் பணிகளில், இலங்கை கடற்படை இணைந்துள்ளது.
நம் அண்டை நாடான, இலங்கையின் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து, நம் நாட்டின் புதுச்சேரியின் காரைக்கால் வரை, பயணியர் படகு போக்குவரத்து சேவை, இம்மாத இறுதியில் துவங்க உள்ளது. இதன் வாயிலாக, காரைக்காலுக்கு இலங்கையில் இருந்து நான்கு மணி நேரத்தில் சென்றடையலாம்.
மூலப்பொருட்கள்
இந்நிலையில், காங்கேசன்துறை துறைமுக உட்கட்டமைப்பு விரிவாக்கப் பணிகளில், இலங்கை கடற்படை இணைந்து உள்ளது.
இது குறித்து, இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்தும் பணிகள், கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வருகின்றன. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணியருக்காக, பயணியர் முனையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்கு தேவையான மூலப்பொருட்கள், இலங்கை துறைமுக அதிகாரிகளால் வழங்கப்பட்டன.
முழு ஒத்துழைப்பு
இதன் வாயிலாக, சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், இந்தியா – இலங்கை இடையிலான நீண்ட கால நட்பு ரீதியான உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், இலங்கை கடற்படை முழு ஒத்துழைப்பை வழங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.