எல்.முருகன் டெல்லியில் தனது வீட்டில் பிரதமர் மோடி, நட்டா உள்ளிட்டவர்களுக்கு விருந்து அளிக்கிறார்.
தமிழ்ப் புத்தாண்டு நாளை (ஏப்ரல் 14) கொண்டாடப்படுவதை முன்னிட்டு இன்று டெல்லியில் தனது இல்லத்தில் முக்கிய நிகழ்வு ஒன்றை நடத்துகிறார் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன்.
கர்நாடக தேர்தல் பணிகளில் பிஸியாக இருக்கும் பாஜக தேசிய புள்ளிகள் இன்று மாலை டெல்லி காமராஜர் லேன், எண். 1-ல் அமைந்திருக்கும் எல்.முருகனின் வீட்டுக்கு படையெடுக்கின்றனர்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, ஒன்றிய அமைச்சர்கள் என முக்கிய பிரமுகர்களை தனது வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுக்கிறார் எல்.முருகன்
நிகழ்வுக்கு வரும் சிறப்பு விருந்தினர்களை தமிழ் முறைப்படி வரவேற்பதற்கும், தமிழ் நாட்டுப்புற கலைகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாகவும் சிறப்பு ஏற்பாடுகளை எல்.முருகன் செய்துள்ளார். இதனால் தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு நாட்டுப்புற கலைஞர்கள் டெல்லி சென்றுள்ளனர்.
கர்நாடக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அண்ணாமலையை தமிழ்நாட்டு பக்கம் அடிக்கடி பார்க்க முடியவில்லையே என்ற பேச்சு பாஜகவுக்குள்ளே இருக்கிறது. ஒன்றிய அமைச்சர்கள் சிலர் தமிழ்நாட்டுக்கு வந்த போதும், பிரதமர் மோடி வந்த போதும் அண்ணாமலை இல்லாதது விவாதத்தை ஏற்படுத்தியது.
டெல்லியில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் உள்பட முக்கிய தலைவர்கள் சங்கமிக்கும் நிகழ்வில் அண்ணாமலை இல்லை என்றால் மீண்டும் விவாதம் கிளம்பும் என்பதால் நேற்று சென்னை வரவேண்டிய அண்ணாமலை ரூட்டை மாற்றி டெல்லி சென்றுவிட்டதாக சொல்கிறார்கள்.