புதுடெல்லி: நாடு முழுவதும் கோவிட் தொற்று அன்றாடம் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் கோவிட் தொற்று எண்டமிக் நிலையை எட்டுவதாக மத்திய சுகாதார அமைச்சக வட்டாரம் தெரிவிக்கின்றது.
இந்தியாவில் தற்போது XBB.1.16 என்ற ஓமிக்ரான் புதிய திரிபு தான் கோவிட் பாதிப்பு அதிகரிக்கக் காரணமாக உள்ளது. XBB வைரஸ் என்பது ஒமிக்ரானின் பிறழ்வு வைரஸ்களில் இருந்து உருமாறிய வைரஸாகும். அதாவது பிஏ.2.10.1, பிஏ.2.75, எக்ஸ்பிஎப், பிஏ.5.2.3மற்றும் பிஏ.2.75.3 வைரஸ்களின் மறுவடிவம் என்று தெரியவந்துள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸின் மரபணு மாற்றமான XBB 1.16 என்ற வைரஸ்தான் தற்போது நிறைய பேரை பாதிக்கக் காரணமாக இருப்பது மரபணு பகுப்பாய்வு முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தான் இந்தியாவில் கோவிட் தொற்று எண்டமிக் நிலையை எட்டுவதாக மத்திய சுகாதார அமைச்சக வட்டாரம் தெரிவிக்கின்றது. அடுத்த 10 முதல் 12 நாட்களுக்கு கோவிட் பாதிப்பு அதிகரிக்கும் அதன்பின்னர் படிப்படியாக குறைந்துவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்போது பரவல் அதிகரித்து வந்தாலும் மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது என்று தெரிவித்துள்ளனர். இப்போதுவரை ஓமிக்ரான் தான் அதிக வீரியம் கொண்ட திரிபாக உள்ளது. அதன் நீட்சியெல்லாம் குறைந்த அளவிலேயே தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளன.
அது என்ன எண்டமிக் நிலை? கரோனா பரவத் தொடங்கியதிலிருந்தே நம் அனைவருக்கும் ‘பேண்டமிக்’ என்ற வார்த்தை பிரபலமாக இருக்கிறது. இந்தப் பதத்துக்குப் பெருந்தொற்று என்று அர்த்தம். அதாவது. இந்நிலையில் இந்தியாவில் கோவிட் எண்டமிக் நிலையை எட்டுவதாகக் கூறப்படுகிறது. இந்தியாவைப் போன்ற பரப்பளவில் பெரிய நாட்டில், அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டில், அதுவும் ஒவ்வொரு பகுதியில் உள்ள மக்களின் இயல்பான நோய் எதிர்ப்பு சக்தித் திறனிலும் பெரிய அளவில் வித்தியாசப்படும் நாட்டில் கரோனா தொற்று இனி எப்போதும் இதுபோலவே சிற்சில ஏற்ற இறக்கங்களை மட்டுமே கண்டுவிட்டு நிரந்தரமாக இருக்கும் சூழலை எண்டமிக் எனக் கூறலாம். எந்தப் பகுதியில் எல்லாம் முதல் இரண்டு அலைகளில் பெரிய பாதிப்பு ஏற்படவில்லையோ அல்லது எங்கெல்லாம் தடுப்பூசி விநியோகத்தில் குறைபாடு இருக்கிறதோ அங்கெல்லாம் அடுத்தடுத்த பாதிப்பு ஏற்பட்டால் தாக்கம் சற்று அதிகமாக இருக்கலாம்.