அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை இது தொடர்பாக ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அண்ணாமலை அணிந்திருக்கும் ரபேல் வாட்ச் பல லட்சம் மதிப்புடையது. அண்ணாமலை அந்த வாட்ச்சை எப்போது வாங்கினார், அதற்கான பில்லை அவர் காட்ட வேண்டும் என்று திமுகவினர் கேள்வி எழுப்ப, சமூக வலைதளங்களில் அது டிரெண்ட் ஆனது. இந்த பிரச்சினையை தொடர்ந்து பில்லை காட்டாமல் திமுக அமைச்சர்கள் பக்கம் பாய்ந்தார் அண்ணாமலை.
திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை மேடை தோறும் முழங்கி வந்தார்.
திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலோடு தனது வாட்ச் பில்லையும் ஏப்ரல் மாதம் காட்டுவேன் என்று சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தார்.
ஏப்ரல் மாதம் பிறந்தவுடன் பில் எங்கே, ஊழல் பட்டியல் எங்கே என்று அண்ணாமலையை நோக்கி கேள்விகள் எழுந்தன. ஏப்ரல் 14ஆம் தேதி அவற்றை முறைப்படி கட்டாயம் வெளியிடுவேன் என்று அண்ணாமலை கூறினார்.
நாளை ஏப்ரல் 14 என்பதால் அண்ணாமலை இன்னும் தமிழ்நாட்டுக்கு வரவில்லை. கர்நாடக சட்டமன்றத் தேர்தல் பணிகளில் பிஸியான அவர், டெல்லியில் இன்று எல்.முருகன் வீட்டில் நடைபெறும் முக்கிய நிகழ்வில் கலந்து கொள்கிறார்.
இந்த சூழலில் நாளை காலை 10.15 மணிக்கு திமுக அமைச்சர்கள் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக ட்விட்டர் பதிவு மூலம் தெரிவித்துள்ளார். DMK FILES என்ற பெயரில் கலைஞர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் உட்பட அவர்களது குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்கள் அடங்கிய சிறு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆனால் வாட்ச் பில் குறித்து எந்த அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை.