புதுடெல்லி: இந்தியாவில் அன்றாட கோவிட் தொற்று 10 ஆயிரத்தைக் கடந்தது. இந்தியாவில் கோவிட் தொற்று எண்டமிக் நிலையை எட்டுவதாக மத்திய சுகாதார அமைச்சக வட்டாரம் தெரிவித்துள்ளது. இன்னும் 10 முதல் 12 நாட்களில் அன்றாட பாதிப்பு படிப்படியாகக் குறையும் என்றும் மத்திய சுகாதார அமைச்சக வட்டாரம் தெரிவித்தது. இந்நிலையில் அன்றாட தொற்று பாதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10158 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இது கடந்த 200 நாட்களில் இல்லாத உச்சம். இதனால் நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 44,998 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 2,29,958 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் 10158 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், கோவிட் தொற்று ஆரம்பித்ததிலிருந்து இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,47,86,160 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம் மட்டும் 5356 பேர் தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதுவரை நாடு முழுவதும் 220.66 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அன்றாட பாசிடிவிட்டி விகிதம் 4.42 சதவீதமாகவும், வாராந்திர பாசிடிவிட்டி விகிதம் 4.02 சதவீதமாகவும் உள்ளது. (பாசிடிவிட்டி விகிதம் என்பது கோவிட் பரிசோதனை செய்யப்படும் 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று உறுதியாகிறது என்ற கணக்கு). கடந்த 24 மணி நேரத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள் சிலருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனைவரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை விதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பரவும் XBB.1.16: இந்தியாவில் தற்போது XBB.1.16 என்ற ஓமிக்ரான் புதிய திரிபு தான் கோவிட் பாதிப்பு அதிகரிக்கக் காரணமாக உள்ளது. XBB வைரஸ் என்பது ஒமிக்ரானின் பிறழ்வு வைரஸ்களில் இருந்து உருமாறிய வைரஸாகும். அதாவது பிஏ.2.10.1, பிஏ.2.75, எக்ஸ்பிஎப், பிஏ.5.2.3மற்றும் பிஏ.2.75.3 வைரஸ்களின் மறுவடிவம் என்று தெரியவந்துள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸின் மரபணு மாற்றமான XBB 1.16 என்ற வைரஸ்தான் தற்போது நிறைய பேரை பாதிக்கக் காரணமாக இருப்பது மரபணு பகுப்பாய்வு முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.