சென்னை: Samantha (சமந்தா) மையோசிடிஸ் நோயிலிருந்து மீண்டு சாகுந்தலம் படத்தில் நடித்தபோது தனக்கு உடல் முழுக்க தழும்புகள் இருந்ததாகவும், அதனால் ரொம்ப கஷ்டப்பட்டதாகவும், சில முறை முயல்களும் கடித்துவிட்டதாகவும் நடிகை சமந்தா தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து ரசிகர்கள் சமந்தாவுக்கு ஆறுதல் தெரிவித்துவருகின்றனர்.
தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட சமந்தா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தெலுங்கில் நடித்தபோது நாக சைதன்யாவை காதலித்தார். இவர்களது திருமணம் கோவாவில் பிரமாண்டமாக நடந்தது. திருமணத்துக்குப் பிறகும் சமந்தா திரைப்படங்களில் நடிப்பதில் தீவிர கவனம் செலுத்திவந்தார். அப்படி அவர் நடித்த படங்களுக்கும் நன்றாகவே வரவேற்பு கிடைத்தது.
பிரிவு: இருவரது திருமண வாழ்க்கையும் சிறப்பாக போய்க்கொண்டிருந்த சூழலில் சமந்தாவும், நாக சைதன்யாவும் பிரிவதாக இருவருமே அறிவித்தனர். இதற்கு பல காரணங்கள் யூகங்களாக சொல்லப்பட்டன. ஆனால் தங்களது பிரிவு குறித்து இரண்டு பேருமே அமைதியாக இருந்தார்கள். திருமண வாழ்க்கை முறிவுக்குப் பிறகு சமந்தாவால் திரையுலகில் நிச்சயம் நிலைக்க முடியாது அவரது கிராஃப் இறங்கிவிடும் என சிலர் ஆரூடம் கூறினர்.
அடித்து நொறுக்கிய சமந்தா: ஆனால் அவர்களின் ஆரூடத்தை அடித்து நொறுக்கும் விதமாக திருமண முறிவுக்கு பிறகு படங்களில் கமிட்டானார் சமந்தா. குறிப்பாக புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு அவர் போட்ட நடனம் அவருக்கு மேற்கொண்டு ரசிகர்களை பெற்றுத்தந்தது. அதுமட்டுமின்றி ஹாலிவுட் படத்திலும் ஹிந்தி வெப் சீரிஸிலும் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார்.
நோய்: சூழல் இப்படி இருக்க சமந்தாவுக்கு மையோசிடிஸ் எனும் தோல் நோய் வந்தது. அதற்காக அவர் பல மாதங்கள் சிகிச்சையில் இருந்தார். ஒருவழியாக சிகிச்சையை முடித்து அதிலிருந்து மீண்ட சமந்தா இப்போது சாகுந்தலம் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இதனையொட்டி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் தீவிரம் காட்டிவருகிறார் சமந்தா.
ப்ரோமோஷன்: சாகுந்தலம் ப்ரோமோஷனுக்காக ரசிகர்களிடம் பேசிய சமந்தா, “எனக்கு மலர்கள் என்றாலே அலர்ஜி. ஆனால் சாகுந்தலம் படத்தில் நடித்தபோது பலமுறை கையை சுற்றியும் கழுத்தை சுற்றியும் மலர் மாலைகளை போட்டுக்கொண்டதால் உடல் முழுவதும் எனக்கு தழும்புகள் வந்துவிட்டன. முதல் நாள் ஒன்றும் தெரியவில்லை. ஆனால் இரண்டாவது நாள் டாட்டூ மாதிரி உடம்பில் தெரிய ஆரம்பித்துவிட்டது. ஆறு மாதங்கள் அவை அப்படியே மச்சங்கள் போல் இருந்தன.
முயல்கள் கடித்தன: இந்தப் படத்துக்காக சுயமாக டப்பிங் பேசினேன். அது கஷ்டமான வேலையாக இருந்தாலும் அந்தக் கதாபாத்திரத்திற்கு ஒரிஜினல் வாய்ஸ் தேவைப்பட்டது. செட்டில் நிறைய முயல்கள் இருக்கும். அவற்றில் ஒன்று படப்பிடிப்பின்போது என்னை கடித்துவிட்டது. அதற்கு முன்புவரை எனக்கு மிகவும் பிடித்திருந்த முயல்கள் கடித்ததிலிருந்து பிடிக்காமல் போய்விட்டது” என்றார்.