சூரத்: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவதூறு வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது குஜராத் மாநிலம் சூரத் அமர்வு நீதிமன்றம் விசாரணையை தொடங்கி உள்ளது.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது கர்நாடகாவில் பிரசாரம் செய்தார் ராகுல் காந்தி. அப்போது, வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று நாட்டை விட்டு ஓடிய நீரவ் மோடி விவகாரம் பேசுபொருளாக இருந்தது. இதனைக் குறிப்பிட்டு பேசிய ராகுல் காந்தி, மோடி என்ற பெயர் குறித்து விமர்சனம் செய்தார்.
ராகுல் காந்தியின் இந்த விமர்சனத்துக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு மீது 3 ஆண்டுகள் விசாரணை எதுவும் நடைபெறவில்லை. பின்னர் மனுதாரர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் இவ்வழக்கு விசாரணைக்கு ஓராண்டு காலம் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் திடீரென இந்த வழக்கு அண்மையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இவ்வழக்கு விசாரணை உடனடியாக நடைபெற்று தீர்ப்பும் உடனே வழங்கப்பட்டது. இந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் கீழ் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்வதற்காக இந்த 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது. இவ்வழக்கில் உடனடியாக ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.,
ராகுல் காந்தி எம்பியாகவும் இருந்தார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் பதவி வகிக்கும் ஒருவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டால் அவரது பதவி ரத்தாகும். இதனடிப்படையில் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டு அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்தை ஒட்டுமொத்தமாக எதிர்க்கட்சிகள் முடக்கி வைத்தனர். ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் சிறை தண்டனைக்கு பின் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடவும் முடியாது என்ற நிலைமை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து சூரத் அமர்வு நீதிமன்றத்தில் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். மேலும் ராகுல் காந்தியின் ஜாமீன் காலம் நீட்டிக்கப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு மீது தற்போது சூரத் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது 2 ஆண்டு சிறை தண்டனைக்கு விதிக்க வேண்டும் என ராகுல் காந்தி தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இவ்வழக்கு விசாரணைக்காக ராகுல் காந்தி நேரில் ஆஜராகி இருக்கிறார்.