மும்பை விமான நிலையத்தில் இன்று காலை மும்பையிலிருந்து அமிர்தசரஸ், மும்பை-அகமதாபாத் செல்லவிருந்த `கோஏர்’ விமானங்கள் திடீரென ரத்துசெய்யப்பட்டன. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் விமானங்கள் ரத்துசெய்யப்பட்டதால் பயணிகள் கொதிப்படைந்தனர். சம்பந்தப்பட்ட விமான நிறுவன ஊழியர்களுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புப் படையினரும் பயணிகளைச் சமாதானப்படுத்தினர். பயணிகள் சோசியல் மீடியாவில் இது தொடர்பாக தொடர்ச்சியாக புகார்களைப் பதிவுசெய்துகொண்டே இருந்தனர்.
மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சருக்கும் ட்விட்டரில் இது தொடர்பாக புகார் செய்தனர். சில பயணிகள் விமான நிலையத்தில் அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். நேற்று கோவா விமான நிலையத்திலும் இதே போன்று கோஏர் விமானம் ஒன்று புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கடைசி நேரத்தில் சொன்னதால் வேறு விமானத்திலும் செல்ல முடியவில்லை. இதனால் பயணிகளுக்கும், விமான ஊழியர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
பயணிகளைச் சமாதானப்படுத்த ஊழியர்கள் மிகவும் போராடினர். இறுதியில் விமான நிறுவனம் வேறு விமானத்தை ஏற்பாடு செய்தது. மும்பை, கோவாவில் கோஏர் நிறுவன விமானங்களின் தாமதம் மற்றும் ரத்து காரணங்களால் கோஏர் நிறுவனத்தின்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். விமானங்கள் 24 மணி நேரத்துக்கும் குறைவாகத் தாமதமானால் பயணிகளுக்கு சாப்பாடு வசதி செய்து கொடுக்கவேண்டும்.
அதே போன்று 24 மணி நேரத்துக்கும் அதிகமாக விமானம் தாமதமானால் பயணிகளுக்கு தங்கும் வசதி செய்து கொடுக்கவேண்டும். விமானம் ரத்துசெய்யப்படுவதாக இருந்தால், பயணிகளுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே அறிவிப்பு கொடுக்கவேண்டும். அதோடு பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தையும் திரும்பக் கொடுக்கவேண்டும் என்பது விதியாகும்.