புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் நேற்று சந்தித்துப் பேசினர். வரும் மக்களவைத் தேர்தலுக்காக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டுவது குறித்து ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், திரிணமூல் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் காங்கிரஸ் அல்லாத கூட்டணியை கட்டமைக்க வேண்டும் என கூறி வருகின்றன.
இந்நிலையில், பிஹார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் காங்கிரஸுடன் இதர கட்சிகளை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக டெல்லி சென்றுள்ள நிதிஷ் குமாரும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை நேற்று சந்தித்துப் பேசினர்.
கடைசி சுற்று பேச்சுவார்த்தை: கார்கே வீட்டில் நடைபெற்ற இந்த சந்திப்புக்குப் பிறகு அனைவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது நிதிஷ் குமார் கூறும்போது, “வரும் மக்களவைத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியாக இணைந்து செயல்படுவதற்காக முயற்சி செய்து வருகிறோம். இதற்காக, காங்கிரஸ் கட்சியுடன் கடைசி சுற்று பேச்சுவார்த்தை நடத்தினோம்” என்றார்.
ராகுல் காந்தி கூறும்போது, “எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதற்காக வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது நம் நாட்டின் மீதான எதிர்க்கட்சிகளின் தொலைநோக்கு பார்வையை மேம்படுத்தும். நாட்டுக்காக நாம் அனைவரும் ஒன்றிணைவோம்” என்றார்.
ஒருமித்த கருத்துடைய கட்சிகளை ஓரணியில் திரட்டுவதற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சமீபத்தில் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பேசினார். குறிப்பாக, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே ஆகியோருடன் கார்கே பேசினார். மேலும் சில தலைவர்களுடன் பேசவும் திட்டமிட்டுள்ளார்.
இதுபோல, ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரை சந்தித்துப் பேச நிதிஷ் குமார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
லாலுவுடன் சந்திப்பு: முன்னதாக உடல்நலக்குறைவு காரணமாக தனது மகள் மிசா பாரதி வீட்டில் ஓய்வெடுத்து வரும் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவை நிதிஷ் குமார் நேற்று சந்தித்துப் பேசினார். வரும் மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக, மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி ஏற்கெனவே அறிவித்திருந்தார். ஆனால், அவதூறு வழக்கில் தண்டிக்கப்பட்ட ராகுல் காந்தி எம்.பி. பதவியை இழந்த பிறகு திரிணமூல் காங்கிரஸ் தனது முடிவை மாற்றிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்ற எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி முடிவென்ன?: மற்றொரு முக்கிய கட்சியான ஆம் ஆத்மி, மக்களவைத் தேர்தல் தொடர்பான தனது முடிவை இன்னும் அறிவிக்கவில்லை. பாஜக கூட்டணியிலிருந்து கடந்த ஆண்டு விலகிய நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆதரவுடன் மீண்டும் முதல்வரானார். இதையடுத்து, பிரதமர் வேட்பாளராக நிதிஷ் விரும்புவதாக தகவல் வெளியானது. கடந்த செப்டம்பரில் பல மாநிலங்களுக்கு சென்று எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முயன்றார். பின்னர் தனக்கு பிரதமர் பதவி மீது விருப்பம் இல்லை என தெரிவித்தார். இந்நிலையில், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் நிதிஷ் மீண்டும் இறங்கி உள்ளார்