காத்மாண்டு, நேபாளத்தில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில், நான்கு இந்தியர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.
நம் அண்டை நாடான நேபாளத்தில் பாஹ்மதி மாகாணத்தின் சிந்துாலி மாவட்டத்தில், இந்தியர்கள் ஐந்து பேர் காரில் காத்மாண்டு நோக்கி சென்றனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், அங்குள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினரால், விபத்து நிகழ்ந்த இடத்திற்கு உடனே செல்ல முடியாததால் ராணுவத்தின் உதவியை நாடினர்.
பின் ராணுவ உதவியுடன் நடத்தப்பட்ட மீட்பு நடவடிக்கையில், மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. மற்ற இருவரை, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் பலியானார். படுகாயமடைந்த மற்றொரு நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாவட்ட எஸ்.பி., ராஜ்குமார் சில்வால் கூறுகையில், ”விபத்து நிகழ்ந்த பகுதிக்கு செல்லவே ஒரு மணி நேரம் ஆனது. நேபாள ராணுவத்தினரின் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டோம். இதில் நான்கு பேர் பலியாகி உள்ளனர். இறந்தவர்களின் விவரங்களை இதுவரை கண்டறிய முடியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்,” என்றார்.
Advertisement