டெல்லி:
இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருப்பது மக்களை பீதியில் ஆழ்த்தி வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணிநேரத்தில் 10,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவு ஆகும்.
இந்தியாவில் கடந்த ஆண்டுடன் கொரோனா பரவல் முடிவடைந்துவிட்டதாகவே அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால், கடந்த சில வாரங்களாக திடீரென கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கின. கடந்த ஆண்டு இறுதியிலும் இவ்வாறு கொரோனா பரவல் வேகம் எடுத்தது. பின்னர், அப்படியே அடங்கிப் போனது.
அதுபோலதான், இந்த முறையும் நடக்கும் என மருத்துவர்களும், பொதுமக்களும் எண்ணி இருந்தனர். ஆனால், இதுவரை இல்லாத அளவுக்கு வேகமாக, வைரஸ் தொற்று மக்கள் மத்தியில் பரவி வருகிறது.
ஒரே நாளில் 10,000 பேர்
கடந்த மூன்று தினங்களாக நாளொன்றுக்கு 5000, 6000 என கொரோனா கேஸ்கள் பதிவாகி வந்த நிலையில், நேற்று இந்த எண்ணிக்கை உச்சம் சென்றது. நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 10,158 பேருக்கு பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆக்டிவ் கேஸ்களின் (சிகிச்சை பெறுவோர்) 44,998-ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் காய்ச்சால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
குழந்தைகளையும் தாக்குகிறது
இதனிடையே, இந்தியாவில் இப்போது பரவும் கொரோனா வைரஸ் XBB.1.16 என்ற வகையைச் சேர்ந்தது ஆகும். இது மனிதர்களுக்கு மிக வேகமாக பரவி பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. கடுமையான உடல் வலி, சளி மற்றும் இருமலே இதன் முதல் அறிகுறிகளாக இருக்கிறது. வைரஸின் தீவிரம் அதிகரிக்க தொடங்கியதும், கடுமையான காய்ச்சலும், நெஞ்சு சளியும் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த முறையை போல இல்லாமல் இந்த முறை குழந்தைகளையும் அதிக அளவில் இந்த கொரோனா தொற்று தாக்குவதாக தெரிகிறது. வைரஸ் காய்ச்சல் ஏற்பட்ட குழந்தைகளுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது.
11 பேர் பலி
இந்த கொரோனா தொற்றால் உயிரிழப்புகளும் ஏற்படுவதுதான் கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது. நேற்று ஒரே நாளில் 11 பேர் வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழந்திருக்கிறார்கள். அதேபோல, 4698 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். தினசரி தொற்று விகிதம் 3.65 சதவீதமாக உள்ளது.
தமிழகத்தில்..
தமிழகத்திலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 432 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. 5,093 மாதிரிகளை சோதனை செய்ததில் மேற்குறிப்பிட்டவர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் 2,489-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க பொது இடங்களில் முகக்கவசம் அணியுமாறும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.