Rudhran: ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தை வெளியிட தடையில்லை… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சென்னை: ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படதை கதிரேசன் இயக்கியுள்ளார்.

ராகவா லாரன்ஸுடன் ப்ரியா பவானி சங்கர், சரத்குமார், பாக்யராஜ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், ருத்ரன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ருத்ரன் படத்தை வெளியிட தடையில்லை என அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

ருத்ரன் படத்தை வெளியிட தடையில்லை
ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் படத்தை கதிரேசன் என்பவர் இயக்கி, அவரே தயாரித்தும் உள்ளார். இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார். நாளை வெளியாகவிருந்த இந்தப் படத்துக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

ருத்ரன் படத்தின் இந்தி உட்பட பிற வட இந்திய மொழிகளின் டப்பிங் உரிமையை பெற ரெவன்ஸா குளோபல் வென்சர்ஸ் நிறுவனம் முயற்சித்தது. இதுதொடர்பாக, ருத்ரன் படத்தை தயாரித்துள்ள ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தது. ரூ. 12 கோடியே 25 லட்சம் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்த ரெவன்ஸா நிறுவனம் முதல் கட்டமாக 10 கோடி ரூபாய் செலுத்தியிருந்தது.

இந்நிலையில், 4 கோடியே 50 லட்சம் ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும் எனக் கூறிய தயாரிப்பு நிறுவனம், திடீரென இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இதனையடுத்து இப்படத்தை வெளியிட அனுமதித்தால், தங்களுக்கு 10 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். இதனால் ருத்ரன் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என ரெவன்ஸா குளோபல் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

 Rudhran: Madras High Court allows the release of Raghava Lawrence Rudhran film

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ருத்ரன் படத்தை ஏப்ரல் 24ம் தேதி வரை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக, இடைக்கால தடையால் தங்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தடையை நீக்க கோரியும் பட தயாரிப்பு நிறுவனமான ஃபைவ்ஸ்டார் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தடையை நீக்க வேண்டும் என, ருத்ரன் தயாரிப்பு நிறுவனத்தின் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து ருத்ரன் படத்தின் இந்தி உட்பட பிற வட இந்திய மொழிகளின் டப்பிங் உரிமையை, வேறு யாருக்கும் வழங்கக் கூடாது எனவும், பிரச்சினையை மத்தியஸ்தர் மூலம் தீர்த்துக்கொள்ளவும் உத்தரவிட்டார்.

மேலும், ருத்ரன் படத்தை திரையரங்கம், ஓடிடி, சாட்டிலைட் ஆகியவற்றில் வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கியும் அவர் உத்தரவிட்டார். இதன் மூலம் ருத்ரன் திரைப்படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ருத்ரன் திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், ராகவா லாரன்ஸ், இயக்குநர், தயாரிப்பாளர் ஆகியோர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.