‘வடநாட்டுப் பெரியார்’… அம்பேத்கர் பற்றி கருணாநிதி என்ன சொன்னார்..?

அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தும், அவருக்கும் இடையே இருந்த தொடர்பு குறித்து தமிழக அரசு நினைவூட்டியுள்ளது. அதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பது.

சாதி, இனம், மொழி என்கிற வரையறைகளைத் தாண்டி, ஒடுக்கப்பட்ட மக்களின் ஓங்கியொலிக்கும் குரலாய் ஒலித்தவர் அண்ணல் அம்பேத்கர். மக்கள் ஏற்றம் பெற்றிட தன் வாழ்வையே அர்ப்பணித்தவர்; இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய மாபெரும் மேதை அண்ணல் அம்பேத்கர்.

‘வடநாட்டுப் பெரியார்’ என்று அனைவராலும் போற்றிப் புகழப்பட்டும், பாபாசாகேப் அம்பேத்கர் என்றும், அண்ணல் அம்பேத்கர் என்றும் அனைவராலும் அழைக்கப்பட்டவர். ‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியாரின் பேரன்புக்குப் பாத்திரமான புரட்சியாளர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்கள், மத்தியப் பிரதேச மாநிலத்தில் 14.04. 1891 ஆம் ஆண்டு ராம்ஜி மாலோஜி சக்பால் – பீமாபாய் தம்பதியதினருக்கு மகனாகப் பிறந்தார்.

அண்ணல் அம்பேத்கர் வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்திருந்ததால்,

படிக்கின்ற பள்ளியிலே தனிமைப்படுத்தப்பட்டதும், அவர் சென்ற பயணங்களின் போது புறக்கணிக்கப்பட்டதும், கல்லூரி படிப்பின் போது சாதியின் பெயரால் பல எண்ணற்ற கொடுமைகளால் அவமானப்படுத்தப்பட்டார்.

தீண்டாமை, சாதியப் பாகுபாடு, வருணாசிரமக் கொள்கை இவை முற்றிலுமாக வேரறுக்கப்பட வேண்டும் என்பதிலே உறுதி பூண்டிருந்த அண்ணல் அம்பேத்கர் சமுதாய அமைப்பிலும், பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் கிடைத்திட வேண்டும் என்பதற்காக பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கினார். லண்டனில் நடைபெற்ற இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறித்த முக்கிய விவாதங்களில், தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென அண்ணல் அம்பேத்கர் வலியுறுத்தினார்.

இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சர், இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் ஆணையத்திற்கு தலைவர், பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் பாண்டித்தியம், ஆசிரியர், இதழாளர், எழுத்தாளர், சமூகநீதிப் புரட்சியாளர் எனப் பன்முகம் கொண்டவர். அண்ணல் அம்பேத்கரால் முன்மொழியப்பட்ட இந்திய அரசியலமைப்பு மிகச்சிறந்த சமூக ஆவணம் என்று வரலாற்று வியலாளரும் இந்திய

அரசியலமைப்பினை நன்கு அறிந்தவருமான கிரான்வில்லா ஆஸ்டினால் பாராட்டப்பெற்றவர்.

தமிழ் மொழியின் மீதும், தமிழ் மக்கள் மீதும் அண்ணல் அம்பேத்கர் அளவற்ற பற்றும் பாசமும் கொண்டிருந்தார். “தமிழ் மொழியானது தமிழகத்திற்கு மட்டுமின்றி, இந்தியா முழுமைக்குமான மொழி” என்று பெருமையோடு குறிப்பிட்டுள்ளார்.

கலைஞர் கருணாநிதி டாக்டர் அம்பேத்கரை பற்றி குறிப்பிடும்போது “அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் நட்சத்திரமாக, கலங்கரை விளக்கமாக, அவர்களைக் கைதூக்கி விடுகின்ற காவலராகத் தோன்றியவர் அண்ணல் அம்பேத்கர்” என்று குறிப்பிட்டார். மேலும், அவரின் ஆட்சிக் காலத்தில், அம்பேத்கருக்கு பெருமை சேர்க்கின்ற வகையில், சென்னை, வியாசர்பாடியில் 1972-ஆம் ஆண்டில் அம்பேத்கர் பெயரில் கலைக் கல்லூரி, 1990-ஆம் ஆண்டு அம்பேத்கர் நூற்றாண்டினை முன்னிட்டு ஓராண்டு காலம் தொடர் விழாக் கொண்டாட்டம், இந்தியாவிலேயே முதன் முறையாக அம்பேத்கர் பெயரில் சட்டப் பல்கலைக்கழகம், சென்னை அடையாறில் 10.06.2000 அன்று ரூபாய்

நான்கு கோடி செலவில் ‘அம்பேத்கர் மணிமண்டபம்’ எனப் பல திட்டங்களை நிறைவேற்றி அண்ணலுக்குப் பெருமை சேர்த்தார்.

இந்தியாவின் சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 133-ஆவது பிறந்த நாள் தமிழ்நாடு அரசின் சார்பில் 14.04.2023 அன்று

சிறப்புடன் கொண்டாடப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்,

உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.